Thursday, September 18, 2025

மனிதனை புனிதனாக்கும் பாவமன்னிப்பு கோரல் “தவ்பா”

மனிதன் இயல்பிலேயே தவறிழைக்கக் கூடியவனாக, பாவம் செய்யக் கூடியவனாக படைக்கப் பட்டிருப்பதனை அல்-குரான் கூறுகின்றது, அவன் அவற்றிலிருந்து மீளுவதற்கும், திருந்திக் கொள்வதற்குமான வழி வகைகளை இஸ்லாம் சொல்லித் தருகின்றது, அடியார்கள் விடயத்தில் இழைக்கப்பட்ட தவறுகள், குற்றங்கள், பாவங்கள், அல்லாஹ்வின் விடயத்தில் இழைக்கப் பட்டவைகள் என உணர்ந்து உரிய விதமான பரிகாரங்களுடன் பாவ மன்னிப்புக் கோருகின்ற மனிதன் புனிதனாகின்றான்.

“(நன்மை செய்வோர் யார் எனின்) எவர்கள் (அறியாமல் ஏற்பட்டுவிடும்) சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும் மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள், நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன், அவன் உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கிய போது, நீங்கள் உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த போதும், உங்களை நன்கு அறிந்தவன் – எனவே, நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள் – யார் பயபக்தியுள்ளவர் என்பதை அவன் நன்கறிவான்.” (ஸுரத் அல் நஜ்ம் 53:32)

இறையச்சம் உள்ளவர்கள் எப்பொழுதும் நன்மைகளை செய்வோர்களாகவும், தீமைகளில் மானக்கேடான செயல்களில் இருந்து தவிர்ந்து கொள்வோராகவும் இருப்பார்கள், பாவக் கரைகள் அவர்களை சூழ்ந்து கொள்ளாமல் தற்காத்துக் கொள்வார்கள், தமது குற்றம் குறைகளை, பாவங்களை உடனுக்குடன் உணர்ந்து மனம் வருந்தி திருந்தி வாழுகின்ற ஆன்மீக பக்குவத்தை அடைந்து கொள்வார்கள்.

Thawba1“இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்;. அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது. அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.”

“(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்;. தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.”

“தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும். உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்;. அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.”

(ஸுரத் ஆலஇம்ரான் 3: 133, 134, 135)

சிலர் அறிந்து கொண்டே விடாப்பிடியாக பாவங்களை செய்வதில் அவர்களது பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான் என்பதற்கு உத்தரவாதம் இல்லை, சிலர் தமது உயிர் பிரியும் வரை பாவங்களில் மூழ்கி இருப்பார்கள் இறுதி நேரத்தில் அவர்கள் த்ரிஉந்தி வாழ சந்தர்ப்பம் கேட்பார்கள், ஆனால் கைசேதமே!

“எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு. உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும். ஞானம் உடையோனுமாக இருக்கின்றான்.”

இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, “நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்” என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை, இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.
(ஸுரத் அந்நிஸா 4:17,18)

மனிதர்கள் செய்கின்ற பாவங்களிற்கான தண்டனை அல்லது விளைவுகள் மறுமை நாளில் மாத்திரமன்றி அவர்களது இவவுலக வாழ்விலும் அவர்களுக்கு சோதனைகளாகவும், வேதனைகளாகவும் வந்தடைகின்றன, அதே போன்றே அவர்கள் செய்யும் நற்கருமங்களும் ஈருலகிலும் பிரதி விளைவுகளைக் கொண்டிருக்கின்றன.

“ஆகவே, அவர்கள் சம்பாதித்ததின் தீமைகள் அவர்களை வந்தடைந்தது இன்னும், இ(க் கூட்டத்த)வர்களிலும் எவர் அநியாயம் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் சம்பாதித்ததின் தீமைகள் விரைந்தே வந்து சேரும் – அன்றியும் அவர்கள் (அல்லாஹ்வை) தோற்கடிக்க முடியாது.”

“நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு உணவு (சம்பத்து)களை விசாலமாக்குகிறான்; சுருக்கியும் விடுகிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா? ஈமான் கொள்ளும் மக்கள் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் திடமான அத்தாட்சிகள் இருக்கின்றன.”

“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.”

Thawba2“ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.”
(ஸுரத் ஸுமுர் 39: 51,52,53,54)

“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும் அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன், காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக! “(அல்பகறா 2:286)

“புனித ரமழான் மாதத்தினை அடைந்தும் ஒருவன் பாவமன்னிப்புப் பெறாமல் மரணித்தால் அவன் நரகம் செல்லட்டும், அல்லாஹ் அவனை தூரமாக்கட்டும்” என வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் கேட்ட துஆவிற்கு தான் ஆமீன் சொன்னதாக எங்கள் உயிரிலும் மேலான தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

பாவ மன்னிப்பு கோரல் “தவ்பா” என்பது என்பது ஒரு அடியானுக்கும் அவனது இரட்சகனுக்கும் இடையே இடம்பெறும் மிகத்தூய்மையான இதயசுத்தியுடன் கூடிய முனாஜாத் ஆகும், பாவங்களில் இருந்து தவிர்ந்து கொள்ளுதல், இடம்பெற்ற பாவங்கள் குறித்த வருந்துதல், பாவத்தில் மீள்வதில்லை என்ற திடசங்கற்பம் கொள்தல் போன்ற பிரதான நிபந்தனைகளோடு மற்றுமொரு பிரதான நிபந்தனை இருக்கின்றது.

மனிதன் அல்லாஹ்வினுடைய விடயத்தில் அல்லது தனிப்பட்ட விடயங்களில் இழைத்த தவறுகள் அல்லாத பிற அடியார்கள் விடயத்தில் இழைத்த குற்றங்களிற்காக அவர்களிடம் உரியவிதத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுதல் மற்றுமொரு நிபந்தனையாகும்.

பெற்றார்கள் விடயத்தில் தவறிழைத்தவர்கள் அவர்களது மன்னிப்பை பெறாவிடின், இரத்த உறவுகளை துண்டித்து வாழ்பவர் அவர்களுடனான உறவுகளை சீர்செய்து கொள்ளாவிடின் அவர்களுடைய எந்த அமல்களும் துஆக்களும் அல்லாஹ்வை அடைவதில்லை அல்லாஹ் அவர்களுடனான உறவினை துண்டித்துக்கொள்கின்றான் என ஹதீஸுகள் தெரிவிக்கின்றன.

ஒருவருக்கு அநீதி இழைத்திருந்தால் அவரிடம் உரிய பரிகார்த்துடன் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுதல் வேண்டும் அநீதி இழைக்கப் பட்டவரின் துஆவிற்கும் அல்லாஹ்விற்கும் இடையில் திரை கிடையாது, அநீதி இழைப்போருக்கு அல்லாஹ் அல்-குர்ஆனில் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளான்.

கொடுக்கப்படவேண்டிய கடன்களை வசதியிருந்தும் செலுத்தாது இருந்தால் அல்லது திருப்பிச்செலுத்துகின்ற எண்ணம் இல்லாது கடன்தந்தவரை ஏமாற்றிக் கொண்டு நோவினை செய்து கொண்டிருந்தால் நிச்சயமாக அவரது பாவங்கள் மன்னிக்கப் படமாட்டாது.

மற்றோருவரது பொருளை, பணத்தை, தொழிலை, அந்தஸ்தை திருடிஇருந்தால் அல்லது குறுக்கு வழிகளில் தான்அடைந்திருந்தால் ஏழைகள், அனாதைகள் விதவைகளுக்கு சேரவேண்டியதை அபகரித்திருந்தால், வரதட்சணை என்ற பெயரில் பலருக்கும்சேர வேண்டிய சொத்துக்களை சூறையாடி இருந்தால் அவற்றை திருப்பிக்கொடுக்காதவரை அல்லது பாதிக்கப் பட்டவர்கள் மனமுவந்து மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.

Thawbaஇலஞ்சம், ஊழல் ,மோசடிகளில் ஈடுபடுவோர், மக்களது அபிவிருத்தி நிதிகளை சூரையாடுவோர் மக்களிற்கும் தேசத்திற்கும் துரோகமிழைப்போர் ஒவ்வொரு வரியிருப்பாளனது உரிமைகளிலும் கைவைப்பதனால் அவர்களுக்கு உரியவர்களிடம் அவற்றை திருப்பிக் கொடுத்து மன்னிப்புக் கேட்காதவரை அவர்களுக்கு மன்னிப்புக் கிடையாது, அவர்கள் மோசடியாக திருடியவைகளை சுமந்துகொண்டு நாளை மஹ்ஷர் மைதானத்திற்கு வருவார்கள்.

இலஞ்சம் ஊழல் மோசடிகளுக்கு துணைபோவோர்கள் அவற்றால் பயனடைவோர்கள் அது மெகா விருந்துகளாக, கொடுப்பனவுகளாக, கையூட்டல்கள் சந்தோஷங்களாக, இப்தார்களாக இருந்தாலும் சரியே பாவத்தில் பங்காளிகள்ஆவார்கள்.

கோள்புறம்பேசித்திரிவோர், அவதூறு சொல்வோர், இட்டுக்கட்டி புனைகதைகளை கூறி அடுத்தவர் மானத்தில் கைவைப்போர், பரிகாசம் செய்வோர், பகிடிவதை செய்வோர், பிறரை கேளி செய்வோர் உரியவர்கள் மன்னிகாத வரை அல்லாஹ்வால் மன்னிக்கப் படுவதில்லை.

வட்டி எடுப்போர், கொடுப்போர் அதில்தொழில் பார்ப்போர் தவ்பா அங்கீகரிக்கப் படுவதில்லை.

பொய் சாட்சி சொல்வோர் தவ்பா அங்கீகரிக்க படுவதில்லை, தேர்தல்களில் ஊழல் மோசடி பேர்வழிகளிற்கு வாக்களிப்பதுவும் பொய் சாட்சியாகும்.

அளவை நிறுவைகளில் மோசடிசெய்வோர், பொய் கூறி ஏமாற்றி கலப்படம் செய்து வியாபாரம் செய்வோர் அவர்கள் ஏமாற்றியவைகளை நாளை கியாமத்துநாளில் சுமந்துகொண்டு வருவார்கள், ஏமாற்றப் பட்டவர்கள் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிக்கமாட்டன்.

அமானிதங்களை பாழ் படுத்துவோர், வக்பு சொத்துக்களை சூரையாடுவோர், வக்புநிதிகளில் பொதுசொத்துக்களில் கையாடல்செய்வோர் அவற்றை உரியவர்களிற்கு ஒப்படைக்கும் வரை பாவங்கள் மன்னிக்கப் படுவதில்லை.

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலைமைச் செயலகமாக இருந்த பள்ளிவாசலின் மூலையில் ஸகாத் எனும் பொது நிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்கள் குவிந்து கிடந்தன. ஒரு முறை நபிகள் நாயகத்தின் பேரன் ஒருவர் அவற்றிலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டு விட்டார்.இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்து விட்டார்கள். உடனே விரைந்து வந்து ‘துப்பு துப்பு’ என்று தமது பேரனிடம் கூறி, துப்பச் செய்தார்கள். புகாரி 1485, 1491, 3072

இவ்வாறு பல்வேறு விடயங்களில் பெற்றார்களிற்கு உறவுகளிற்கு உடன் பிறப்புகளிற்கு, அண்டை அயலவருக்கு, ஏனைய மனிதர்களிற்கு, ஊரிற்கு சமூகத்திற்கு , தேசத்திற்கு தாம்இழைத்த தவறுகள் குற்றங்களிற்கு உரியவிதத்தில் பரிகாரம் பெறாது அல்லாஹ்விடம் தவ்பா செய்தால் அது அங்கீகரிக்கப் படமாட்டாது.

காலம் கடந்து கைசேதப்பட்டு உரியவர்களிடம் உரியவிதத்தில் மன்னிப்புக் கோரும் அவகாசம் இல்லாது போனால் என்ன செய்வது என்பதனை தத்தமது நிலவரங்களுக்கு ஏற்ப அறிஞர்களிடம் உலமாக்களிடம்கேட்டு தெரிந்துகொண்டு தவ்பா செய்து கொள்ளலாம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எங்கள் அனைவருக்கும் உரியவிதத்தில் தவ்பா செய்து பாவங்களில் இருந்து மீண்டு நல்லடியார்களாக வாழ்ந்து அவனிடம்மீள அருள்புரிவானாக!

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles