Thursday, September 18, 2025

அமானிதங்கள் பாழாக்கப்பட்டால் யுக முடிவை எதிர்பாருங்கள்..

உலக வாழ்வில் எல்லாத் துறைகளிலும் எல்லா மாட்டங்களிலும் சத்தியத்தை நிலை நாட்டுகின்ற மிகப்பெரிய அமானிதத்தை மனிதன் சுமந்துள்ளான், மனித குல விமோசனத்திற்காக வெளியேற்றப்பட்ட சிறந்த உம்மத்தாக இறுதி இறை தூதர் எமது தலைவர் முஹம்மது (ஸல்) அவர்களது உம்மத்து அல்லாஹ்வால் அழைக்கப் படுகின்றது.

“நிச்சயமாக நாம் அமானிதத்தை வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றின் மீது (அதைச்சுமந்து கொள்ளுமாறு) எடுத்துக்காட்டினோம். அப்போது அதைச்சுமந்து கொள்வதிலிருந்து அவைத விர்ந்து கொண்டன. இன்னும் அதை சுமப்பதிலிருந்து அவை பயந்தன. (ஆனால்) மனிதனோ அதனைச்சுமந்து கொண்டான். நிச்சயமாக அவன்(அமானிதத்தை நிறைவேற்றும் விசயத்தில்) பெரும் அநியாயக்காரனாக ( அதன் கடமையை) அறியாதவனாக இருக்கின்றான்.”( ஸுரத்துல் அஹ்ஸாப் : 72)

“விசுவாசிகளே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் ஒப்படைத்து விடுமாறும், மனிதர்களுக்கிடையில நீங்கள் தீர்வு கூறினால், (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான். நிச்சயமாக அல்லாஹ் செவியேற்கிறவனாக, பார்க்கிறவனாக இருக்கின்றான்.” ( சூரத்துல் நிஸா: 58)

“அமானிதங்கள் பாழாக்கப்பட்டால் யுக முடிவை எதிர்பாருங்கள்” என எமது தலைவர் கண்மணி ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மனித குல விமோசனத்திற்கான சத்தியத்தூதை சமர்பிப்பதும் அதன் வழி நடப்பதும் சத்தியம் நிலைக்க உழைப்பதும் மனித குலம் சுமந்துள்ள மிகப்பெரிய அமானிதமாகும்.

“அமானிதம்” என்பது நம்பிக்கை நாணயம் என்பதற்கப்பால் உண்மை நீதி நேர்மை வாய்மை சத்தியம் மனிதர்களின் சொல் செயல் பண்பாடுகள் என சகலதிலும் பிரதிபலிக்கின்ற உன்னதமான பண்பாகும்.

Amanathபொதுவாக ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டதை உரியவரிடம் கொடுத்துவிடல்” அமானிதம் ” என்று சொல்வார்கள், ஆனால் அமானிதம் பேணலில் அது ஒரு அம்சமாகும்.

உண்மை பேசல் அமானிதமாகும், உண்மை சென்றடைய வேண்டிய ஒருவரிடம் பொய்யை சேர்பிப்பது அநீதியாகும், சத்தியம் செய்வதெனின் உண்மையை சொல்வது அமானிதமாகும், நன்மையான விவகாரங்களில் இரகசியம் பேணல் அமானிதமாகும், எல்லாவகையான பொறுப்புக்களும் அமானிதங்களாகும்,பதவிகள் தொழில்கள் செல்வம் செல்வாக்கு ஆட்சி அதிகாரம் சகலதும் அமானிதங்களாகும்.

பெற்றார்கள், மனைவி,மக்கள், குடும்பம், உறவு முறைகள் சகலதும் அமானிதங்களாகும், மனைவிக்கு இல்லத்தரசியாக அமானிதங்கள் இருக்கின்றன; தொழிலார்களின், உழைப்பு,வியர்வை,ஊதியம் என அவர்களது உரிமைகள் யாவும் அமானிதங்களாகும்; அடுத்தவர் மானம், கௌரவம், கற்பு, நட்பு, உயிர்,பொருள், இரத்தம் சகலதும் அமானிதங்களாகும்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (றழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புஹாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது:

“நீங்கள் எல்லோரும் பொறுப்பாளர்கள். உங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்கள் பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். இமாம் ஒரு பொறுப்பாளர். அவரது பொறுப்பு குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண் அவரது குடும்பத்திற்கு பொறுப்பாளர். ஆவரது பொறுப்பு குறித்து அவர் விசாரிக்கப்படுவார். பெண் தனது கணவனின் வீடு (குடும்பம்) திற்கு பொறுப்பாளர். அவள் அது குறித்து விசாரிக்கப்படுவாள். ஒரு ஊழியன் தனது எஜமானனின் பொருட்கள் குறித்த பொறுப்பாளி. அது குறித்து அவன் விசாரிக்கப்படுவான். தொடர்ந்து அந்த ஸஹாபி நான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறும் சொன்னார்கள் என நினைக்கிறேன் எனக்கூறிவிட்டு சொன்னார்கள்… தகப்பனின் பணத்தின் மீது பொறுப்பாளியான ஒரு மனிதன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நீங்கள் எல்லோரும் பொறுப்பாளிகளே. உங்களுடைய பொறுப்புக்கள் குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.”

தகுதியானவர்களுக்கு அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை, இடத்தை,பதவியை, பொறுப்பை வழங்குவது அமானிதமாகும், இமாமத், தலைமை ஆட்சி அதிகாரம் இவையெல்லாம் அமானிதங்களாகும்.

Amanath 1முண்டியடித்துக் கொண்டு பொறுப்புக்களை பதவிகளை ஆட்சியை அதிகாரத்தை தகுதியற்றவர்கள் தட்டிப் பறித்துக் கொள்வதனை அதற்காக சூழ்சிகள் செய்வதனை இஸ்லாம் தடுத்துள்ளது, அதேபோல் தகுதியற்றவர்களிடம் அவை சென்றடைவதை பார்த்துக் கொண்டிருப்பதும் அமானிதங்களை பாழாக்ககுவதாகும்.

குறுக்கு வழியில் ஒருவருக்குச் சேர வேண்டிய தொழிலை, அந்தஸ்தை, செல்வத்தை அடைய முணைவது அமானிதத்தை பாழாக்க்குவதாகும்.

பாராட்டப்பட வேண்டிய ஒருவரை பாராட்டாமல் இருப்பது, ஊக்குவிக்கப்படவேண்டிய ஒருவரை ஊக்குவிக்காமல் இருப்பது, அங்கீகரிக்கப்படவேண்டிய ஒருவரை அங்கீகரிக்காமல் இருப்பது அல்லது அவற்றையெல்லாம் தகுதியில்லாவிடினும் தாமே அடைந்து கொள்ள முணைவது எல்லாம் அமானிதங்களை பாழ் படுத்துவதாகும்.

கருத்துக்கள், சிந்தனைகள், விமர்சனங்கள், எழுத்துக்கள், பேச்சுக்கள், ஊடகப்பணிகள், பத்திரிக்கை தர்மங்கள்,முடிவுகள் சகலதும் அமானிதங்களாகும்.

வாக்குறுதிகள், உடன்பாடுகள், உடன்படிக்கைகள் அமானிதங்கள் ஆகும் .

சந்தர்ப்பங்கள், சலுகைகள், வசதி வாய்ப்புக்கள், வளங்கள், என சகலதும் அமானிதங்களாகும்.

கட்சி, அரசியல், தேர்தல், வாக்குரிமை, ஆட்சி, அதிகாரம், நிர்வாகம், மக்களது வரிப்பணம், அபிவிருத்தி நிதிகள், தொழில் சார் சலுகைகள், சிறப்புரிமைகள், வசதி வாய்ப்புக்கள், கொடுப்பனவுகள், ஊதியங்கள் என எல்லாமே அமானிதங்கள்.

“அமானிதம்” எவ்வளவு பாரதூரமானது, அது எவ்வளவு மகத்தானது என்பதனை மிகச் சிறந்த உவமான உவமேயங்களில் எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களுக்கு உணர்த்துகின்றான்.

“நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக்காட்டினோம், ஆனால் அதை சுமந்துக்கொள்ள அவை மறுத்தன, அதைப்பற்றி அவை அஞ்சின. (ஆனால்) மனிதன் அதை சுமந்து கொண்டான். நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும் அறிவிலியாகவும் இருக்கின்றான் ” [33:72]

ஆதரவும்,அபிமானமும், விமர்சனங்களும் அமானிதங்களாகும்.

amanath3உண்மை,நேர்மை, நீதி, நியாயம், நன்மை, சத்தியம், அன்பு, கருணை, மனிதாபிமானம் என எல்லா உயரிய மானுட விழுமியங்களையும் போற்றி நாம் வாழ்வது எவ்வளவுக்கெவ்வளவு பிரதானமானதோ அதைவிடவும் பன்மடங்கு பிரதானமானது அவற்றைப் பேணும் சான்றோர் பக்கம் சார்ந்து நிற்பதும் அவர்களுக்கு தோள் கொடுப்பதும் ஏனெனில் கூட்டு வாழ்வில் குடும்பங்களாகவும், சமூகங்களாகவும், தேசங்களாகவும் சத்தியத்தை மேலோங்கச் செய்வது எங்கள் ஒவ்வொருவர் மீதும் விதிக்கப்பட்டுள்ள தலையாயகடமையாகும்.

மேற்படி அம்சங்களை கவனத்திற் கொள்ள முடியாத அளவு ஆன்மீக படித்தரங்களை அடையாது அசத்தியத்தையும் அதன் காவலர்களையும் ஆதரிக்கும் தனி நபர்களும் குழுக்களும் “க்ஹியானத்” எனும் அமானித மோசடிக் காரர்களாகும், உலகில் போலிகளின் கவ்ர்சிகள்கள், அவர்கள் வசமுள்ள செல்வம் செல்வாக்கு அதிகாரங்கள் எம்மை குருடர்களாக, செவிடர்களாக மாற்றிவிடுமாயின் யுக முடிவின் பொழுது “தஜ்ஜால்” சதி வளையில் அசத்தியத்தில் அறிந்து கொண்டே விழுகின்ற துர்பாக்கியசாளிகளாக நாங்கள் ஆகிவிடுவோம்.

” .இவ்வாறு இவர்கள் அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு ஜாலூத்தின் படையை முறியடித்தார்கள்;. தாவூது ஜாலூத்தைக் கொன்றார்;. அல்லாஹ் (தாவூதுக்கு) அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான்;. தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக் கற்பித்தான்; (இவ்விதமாக)அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான். ” ( ஸுரதுல் பகரா :251)

எங்கள் சொல், எழுத்து, செயல் அங்கீகாரம் எல்லாமே எல்லாம் வல்ல அல்லாஹ் விரும்பத்தக்கவையாக அமைய வேண்டும், மாறாக ஷைத்தானிய சக்திகளை ஊக்குவிப்பதாக ஒரு பொழுதும் இருந்து விடக் கூடாது.

” …மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான். ” (ஸுரத்துல் ஹஜ் : 40)

ஊடகவியல் பணி மிகப்பெரிய அமானிதமாகும்!

உண்மை, நீதி, நேர்மை, பக்கச்சார்பு, பாகுபாடின்மை போன்ற உயரிய பண்புகள் எல்லாத் தரப்பினருக்கும் பொதுவானவையாகும்.

Mediaஎன்றாலும் ஒட்டுமொத்த உம்மத்து, தேசம், சமூகம் சார்ந்த விவகாரங்களில் உருவாக்கப்படும் பொதுசன அபிப்பிராயத்தில் அதிகபட்ச ஆதிக்கம் செலுத்தும் வெகுசன ஊடகப் பணி மிகப் பெரிய அமானிதமாகும்.

பிழையான தரப்புக்களை பிரபல்யப் படுத்தல், பிழையான தகவல்களை, மனப்பதிவுகளை, அபிப்பிராயங்களை பரப்புதல், தகவல்களை திரிபு படுத்துதல், இருட்டடிப்புச் செய்தல், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பிழையான தரப்புக்களுக்கு அங்கீகாரம் வழங்குதல், சரியான தரப்புக்களை கண்டு கொள்ளாதிருத்தல்.

செல்வம் செல்வாக்கு ஆட்சி அதிகாரம் உள்ள தரப்புக்களுக்கு கால் பிடித்து, வால் பிடித்து, ஆள் பிடித்தல், சமூகத்தின் பாமரத்தனங்களில் சவாரி செய்வோருக்கு துணை போதல் போன்ற நடவடிக்கைகள் முற்றிலும் ஹராமாகும்.

இலத்திரனியல், பதிப்பு ஊடகங்கள் மாத்திரமன்றி சமூக ஊடகங்களை கையாள்வோரும் தமது மனச்சாட்சியை விலை பேசுகின்ற ஊடக பிழைப்பினை மேற்கொள்வதில் இருந்து தவிர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

குறிப்பாக சமூக ஊடகங்கள் மக்களின் கரங்களில் உள்ள ஊடகங்களாகும், அவற்றை சமுதாயSocial-Media-Impact தேசிய மற்றும் மனித குல நன்மைகளுக்காக பயன்படுத்துவதில் அளப்பரிய நன்மைகள் இருக்கின்றன, அதே போன்றே மறுபக்கமும் என்பதனையும் நாம் மறந்து விடலாகாது.

மாறாக, உண்மை, நீதி நேர்மை, சமாதனம், சமத்துவம், பக்கச்சார்பு, பாகுபாடின்மை பேணி தமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஊடகப் பணி செய்வோர் மிகவும் உன்னதமான உயரிய பணியை மேற்கொள்கின்றார்கள்.

எங்களிடமிருந்து புறப்படும் ஒவ்வொரு சொல்லும் செயலும், அங்கீகாரமும் புறப்பட வேண்டிய தருணத்தில் புறப்படாத ஒவ்வொரு செயலும், சொல்லும் அங்கீகாரமும் பிரதிவிளைவுகளுடன் இன்மையிலும் மறுமையிலும் எங்களிடமே மீளுகின்றன.

தஜ்ஜாலிஸம் :
“பிழையான தரப்புக்களுக்கு வழங்கும் ஆதரவு, சரியான தரப்பிற்கு இழைக்கும் அநீதியாகும், எல்லா அநீதிகளும் வரம்பு மீறலாகும்”

அங்கீகாரங்கள் அமானிதங்களாகும்..

குழந்தைகள் முதல் பெரியோர் வரை அவர்களது சிறிய சிறிய நல்ல செயல்களை கூட பாராட்டுங்கள், அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள், அது அவர்களுக்கான அங்கீகாரமாகையால் அவர்களது உள்ளத்தில் மன நிறைவை, மகிழ்ச்சியை உண்டாக்கும், நல்லவைகளை தொடர்ந்தும் செய்ய ஊக்குவிக்கும்.

Greetingவாழ்த்துக்கள் கூறுவது, பாராட்டுவது, அடுத்தவர் திறமைகளை, நற் செயல்களை அங்கீகரிப்பது சிறியோர் மீது அன்பும், பெரியவர்கள் மீது மரியாதையும் காட்டுகின்ற உயர்ந்த பண்பாடாகும்.

அவ்வாறான நல்ல பண்பாடுகளை முந்திக் கொண்டு அமுல் செய்வோருக்கு இரட்டிப்பு நன்மைகள் இருக்கின்றன. மற்றொருவர் செய்தால் நாமும் செய்வோம் என்று பிரத்தியுபகாரம் செய்ய காத்திருப்போர் சுயநலமிகள்.

ஒருவருக்கு நன்றி கூறுகின்ற பொழுது, அவரை பாராட்டுகின்ற பொழுது அவரது மன அழுத்தம், கவலைகள், நம்பிக்கையீனங்கள், விரக்திகள் கூட பறந்து போய்விடுகின்றன, அவர்களது உள்ளங்கள் அமைதி பெறுகின்றன.

மனிதர்களிற்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவனாக மாட்டான் என இஸ்லாம் எங்களுக்கு கற்றுத் தருகின்றது.

இன்று தாம் செய்யாதவற்றிக்காக பாராட்டுக்களை பெற்றுக் கொள்வதற்கும், அடுத்தவர் திறமைகளை, அர்பணங்களைை, அங்கீகாரங்களை தமாதாக்கிக் கொள்வதற்கும் பலர் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றார்கள், அவர்களும் பகல் கொள்ளைக் காரர்கள் தான்.

அன்பு, சமாதானம், மன அமைதி, நிம்மதி, சந்தோஷம் என்பவற்றிற்காக ஏங்கித் தவிக்கும் உலகில் ஒரு விசுவாசி அடுத்தவரை சந்திக்கின்ற பொழுதே “உங்கள் மீது சாந்தியும், சமாதானமும்” உண்டாவதாக என்ற உயரிய பிரகடனத்தை செய்துகொள்கிறார்.

Thanksஅத்தகைய பண்புகளே உலகில் நேரிடையான சிந்தனைகளை விதைத்துக் கொண்டிருக்கின்றன, அதனால் தான் ஒரு சகோதரனை முகமலர்ச்சியுடன் பார்ப்பது கூட
ஸதகா என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

அடுத்தவர் அகத்திலும் முகத்திலும் மலர்ச்சியை கொண்டுவருவது உங்கள் நல்ல குணாதிசயங்களின் பண்பாடுகளின் பிரதிபலிப்பாகையால் அதற்கு நற்கூலியுண்டு, நீங்களும் நேசிக்கப் படுவீர்கள்.

இன்று போட்டியும் பொறாமையும் நிறைந்த உலகில் மனிதன் சிரிப்பதற்கும் அழுவதற்கும் இலாப நஷ்டக் கணக்குகளை பார்த்துக் கொண்டிருக்கின்றான்.

குறை தேடும் உலகில் நிறை தேடுங்கள் நீங்களும் -நன்றியுடைய- மனிதர்கள் ஆகலாம்.

 

 

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles