எமது சொற்களும் செயல்களும் அங்கீகாரங்களும் எமது வாழ்வில் அனுகூலங்களையும், பிரதிகூலங்களையும் கொண்டுள்ளன.
ஒருவரது சொல்லாயினும், செயலாயினும், அங்கீகாரங்களாயினும் அவரைச் சூழ்ந்து கொள்கின்றன, அவரை பின் தொடர்கின்றன, அரிடம் பிரதி விளைவுகளுடன் மீண்டு வருகின்றன.
நல்ல சொற்களும் நடத்தைகளும் அவருக்கு அரணாக, ஆசிர்வாதமாக அவரை பின் தொடர்வது போல், தீய சொற்களும், நடத்தைகளும் அவருக்கு கெடுதியாக சாபமாக துரத்திக் கொண்டிருக்கின்றன.
எவ்வளவிற்கு எவ்வளவு எம்மிடமிருந்தது நல்லவைகள் புறப்படுகின்றனவோ அவ்வளவிற்கு அவ்வளவு நன்மைகள் பட்டாளம் ஆசீர்வாதமாய் அனுகூலங்களாய் எங்களை சூழ்ந்து கொள்கின்றன.
எவ்வளவிற்கு எவ்வளவு தீமையான, சொற்கள், செயல்கள், அங்கீகாரங்கள் எம்மிடம் இருந்து புறப்படுகின்றனவோ அவ்வளவிற்கு அவ்வளவு தீமைகளும், கெடுதிகளும், பிரதிகூலங்களும் எங்களைச் சூழ்ந்து கொள்கின்றன.
எமது நடத்தைகளிற்கான நேரிடையானதும், எதிர்மறையானதுமான அனுகூலங்கள், பிரதிகூலங்கள், எதிர்வினைகள் ஏற்படுகின்ற ஒரு பிரபஞ்ச நியதியினால் இந்த உலகம் இயக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது.
பிரபஞ்ச இயக்கத்தின் மொத்த மென்பொருள் கழாவாகவும் கத்ராகவும் இருக்கிறது, மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட தெரிவுச் சுதந்திரங்களுக்குள் மாத்திரமே வாழ்வும் மரணமும் அவனுக்கு ஒரு சோதனைக்களமாக இருக்கிறது.
நாம் அடுத்தவருக்கு நன்மையோ தீமையே செய்வதாக நினைத்துக் கொண்டு எமக்கே அனுகூலங்களையே பிரதிகூலங்களையே உழைத்துக் கொண்டும், விதைத்துக் கொண்டும் இருக்கின்றோம். அவை இவ்வுலக வாழ்வில் மட்டுமல்லாது மறு உலக வாழ்விலும் எம்மை தொடர்கின்றன.
அல்லாஹ்வையும், அவன் தூதரிடம், விசுவாசிகளையும்,உலகத்தையம் ஏமாற்றுவதற்காக நினைத்துக் கொண்டு பலர் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
மனிதன் நெறி பிறழும் பொழுது பிரபஞ்ச நியதிகளுடன் மோதிக் கொள்கின்றான். சத்தியத்தின் வழி நடக்கும் மனிதன் பிரபஞ்ச இயக்கத்தில் தன்னை சரியான இயங்கு தளத்தில் நிலைப்படுத்திக் கொள்கின்றான், அசத்தியத்தின் வழி செல்பவன் தன்னைத் தானே விடுவித்துக் கொண்டு நேரிய இயங்கு தளத்தில் இருந்து தடம் புரளுகிறான், நயவஞ்சகர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர்.
இறைவனால் வகுக்கப்பட்டுள்ள பிரபஞ்ச நியதிகள், இயற்கை நியதிகள் எனும் மென் பொருட்கள்..
இந்த முழு பிரபஞ்சத்திற்கும் அதில் உள்ள அத்துணை படைப்புகளுக்கும் பின்னால் அவற்றிற்கான இயக்க விதிகள், பிரபஞ்ச நியதிகள், இயற்கை நியதிகள் என ஏற்கனவே மென்பொருளாக (கழா கத்ராக) வகுக்கப் பட்டிருக்கின்றன,சீரான அவற்றின் இயக்கத்திற்கு பின்னால் எல்லாம் வல்ல ஏகனாகிய அல்லாஹ்வின் எல்லையில்லா அறிவும் சக்தியும் நாட்டமும் பிரதிபலிக்கின்றன.
அதே போன்றே மனித வாழ்விற்கான விதிகளும், நியதிகளும்(கழா கத்ராக) வகுக்கப் பட்டிருக்கின்றன, கூடுதலாக மனிதனுக்கு வாழ்விற்கும் மரணத்திற்குமிடையில் வரையறைகுற்பட்ட தெரிவுச் சுதந்திரமும் வழங்கப்பட்டு வாழவும் மரணமும் ஒரு பரீட்சைக் களமாக அவனுக்கு ஆக்கப்பட்டுள்ளது.
“கழா கத்ர்” நாம் தரும் உள்ளீடுகளை (Input) பெற்று அதனை செயல்படுத்தி (process) அதற்க்கு இணையான வெளியிடுகளை (output) தரும் கணினியின் மென்பொருள் போன்றது.
மனிதனின், சொல்லும், செயலும், நடத்தைகளும், நடைமுறைகளும் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ள வடிவமைக்கப்பட்டு கழா கதரேனும் இறைவன் வகுத்துள்ள நியதிகளான மென்பொருட்களுக்கான கட்டளைகளாக (commands) இருப்பதனால் அவனது தெரிவிற்கேற்ப எதிர்வினைகளும், பிரதிபலன்களும் இவ்வுலக வாழ்விலும் மறு உலக வாழ்விலும் அவனுக்கு அமைகின்றன.
ஆழமான ஆன்மீக நம்பிக்கைகளின் மீதும் கடமையானதும், விரும்பத் தக்கதுமான வணக்க வழிபாடுகள், தான் தர்மங்கள் மீதும் கட்டி எழுப்பப் படுகின்ற உயரிய மானுட பண்பாட்டு நல்லொழுக்க நடை முறைகள் இயற்கை நியதிகளுடன் மோதிக் கொள்ளாத மிகச் சிறந்த
கட்டளைகளாக இருப்பதனால் ஈருலக வாழ்வும் வளம் பெறுகின்றது.
அடுத்தவர் அகத்தில் மகிழ்வை விதைத்தால் சொந்த முகத்தில் அது மலரும்!
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்என்பார்கள், ஒருவரது மனது அமைதியிழந்திருந்தால் அதற்குபல புறக்காரணிகள் இருக்கலாம், துயர், சோகம், கவலை,கடன், கஷ்ட நஷ்டங்கள், அடுத்தவர் தொல்லைகள், குடும்ப, தொழில் நிலவரங்கள், சகபாடிகள், மேலதிகாரிகளின் நடத்தைகள், இல்லாமை, இயலாமைகள் என இன்னோரன்ன பிரச்சினைகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
பெரும்பாலும் எமது குணாதிசியங்கள், நடவடிக்கைகள், நடத்தைகள், பொடுபோக்குகள், கவனயீனங்கள், புறக்கணிப்புக்கள், ஆத்திர அவசரங்கள், பெருமை, பொறாமை, பேராசை, கர்வம், விட்டுக் கொடாமை, பிடிவாதங்கள், நிதானமின்மை, திட்டமிடலின்மை, சம்யோசிதமின்மை போன்ற புறக் காரணிகளும் எமது மன அமைதியை கெடுத்து விடுகின்றன.
எமது மேற்படி பண்புகளை, நடத்தைகளை நிதானமாக மதிப்பீடு செய்து எங்களை நாங்களே ஒருபடி முன் நகர்த்த முற்படாவிடின் எமது நிலைமைகளை வேறு எவராலும் சீர் செய்ய முடியாது எமது உயரிய பண்பாடுகள், ஒழுக்க விழுமியங்களால் அடுத்தவர் பயன் பெறுகின்றார்கள் என்பதனை விட எங்கள் சொந்த வாழ்வே வளமாகின்றது என்பதுவே உண்மையாகும்.
நாம் ஏன் ஒருவருக்கு முந்திக் கொண்டு வாழ்த்துச் சொல்ல வேண்டும்?, நாம் ஏன் கை கொடுக்க வேண்டும்? நாம் ஏன் உதவ வேண்டும், நாம்ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? நாம் ஏன் ஒருவரை மதிக்க வேண்டும்.? என எல்லா நேரமும் சுய நலமிகளாக சிந்திக்கின்றவராக நாம் இருந்தால் எமக்கு நாமே அநியாயம் செய்து கொள்கின்றோம் என்பதே அர்த்தமாகும்.
நல்ல கருமங்களை செய்வதில் முந்திக் கொள்வதும்போட்டி போடுவதும் மறு உலகில் எமக்கு சுவன வாழ்வை ஈட்டித் தருவதற்கு முன்னர் இவவுலக வாழ்விலும் எமது வாழ்க்கையில் வசந்தங்களை கொண்டு வந்து சேர்க்கின்றன, அவ்வாறான இறைவன வகுத்த இயற்கை நியதியின் கீழ் தான் இந்த உலகம்இயக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது
எங்களால் முடிந்தவரை அடுத்தவர் மனதில் சிறந்த நேரிடையான மனப்பதிவுகளை, தடயங்களை விட்டுச் செல்கின்ற பொழுது எங்களிடமே அவை போற்றத்தக்க விளைவுகளுடன் மீண்டு வருகின்றன, எமது அனைத்து சொல்,செயல், அங்கீகாரங்களுக்கும் நிச்சயமாக பிரதி விளைவுகள் இருக்கவே செய்கின்றன.
எமது இறையச்சமும், தொழுகையும், நோன்பும் இன்னோரன்ன வணக்க வழிபாடுகளும் தான தர்மங்களும் எம்மில் விதைக்கின்ற உயரிய பண்பாடுகள், மனித நேய விழுமியங்கள் நிச்சயமாக எமது மறு உலக வாழ்வை மாத்திரமன்றி இவவுலக வாழ்வையும் அருள் நிறைந்ததாக மாற்றி விடுகின்றன.
பிரபஞ்ச நியதிகளுடன் இயைந்து செல்கின்ற பகுத்தறிவும், மனச்சாட்சியும், உள்ளுணர்வுகளும் அல்லாஹ்வின் அளப்பரிய அருட்கொடைகளே, அங்கிருந்தே மதங்கள் தாண்டிய மனிதாபிமானம் ஊற்றெடுக்கின்றது, உயரிய மானுட விழுமியங்கள் பேணிப் பாதுகாக்கப் படுவதற்கான உச்ச வரம்புகளையே அருளப்பட்ட சன்மார்க்கங்கள் போதிக்கின்றன.
இந்த உலக வாழ்வு ஒன்றுக்கொன்று தொடர்புள்ள வினைகள் எதிர்வினைகளால் இயல்பாகவே இயக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது…!
எங்கள் எண்ணங்கள், பேச்சுக்கள், செயற்பாடுகள், உயரிய குண நலன்கள், நல ஒழுக்கங்கள்,பண்பாடுகள், பிரார்த்தனைகள், இறையச்சம், உளத்தூய்மை, பெரும்தன்மை, பொறுமை, சகிப்புத் தன்மை, மனிதாபிமானம், ஜீவ காருண்யம், அன்பு, கருணை, அனுதாபம், அர்ப்பணம், தன்னம்பிக்கை, துணிவு, வீரம், பிறருக்கு உதவும் தயாளத் தன்மை, அடுத்தவர் சுக துக்கங்களில் பங்கெடுத்தல், அடுத்தவர் உணர்வுகளை மதித்தல், என இன்னோரன்ன நேரிடையான பண்புகளே எமது வாழ்வின் வசந்தங்களை வடிவமைக்கின்றன, அவைதான் எமது சுற்றுச் சூழலில்,குடும்ப , சமூக தேசிய வாழ்வில் எமக்கு பிரதி பலித்து பிரதிபலன்களை கொண்டு வருகின்றன.
ஒரு விசுவாசி மற்றுமொரு விசுவாசிக்கு கண்ணாடி போன்றவன் என்பது நபி மொழி, குறை நிறைகளை சுட்டிக்காட்டுவது, அவற்றை தமக்கு மட்டும் சுட்டிக் காட்டுவது போன்ற உடனடி விளக்கங்கள் அதற்கு தரப்பட்டிருக்கின்றன, அதற்கப்பாலும் மேலே சொன்ன எமது உயர் குணங்களின் ஆன்மீக பண்பாட்டு பக்குவங்களின் அன்றாட பிரதிபலிப்புக்களை மிகச் சரியாக வாழ்வின் சகல படித்தரங்களிலும் மற்றுமொரு விசுவாசியிடமிருந்து கண்டு கொள்ள முடியும் என்பதனையும் இந்த நபி மொழி உணர்த்துகிறது.
இவ்வாறான உயரிய ஆன்மீக பண்பாட்டு பக்குவமிக்க தனிநபர்கள், குடும்பங்கள் சமூகங்கள் தான் “கைர உம்மத்” மிகச் சிறந்த சமூகம் என வர்ணிக்கப்படுகிறது, அதேபோன்றே அத்தகைய பண்பு ஒழுக்கங்கங்களுக்கு நேர் எதிரான அல்லது எதிர் மறையான அம்சங்கள் கொண்டோரின் வாழ்வு பாழடைந்த வீடாக, வறண்டு போன நிலமாக சோபை இழந்து காணப்படும்.
இறையச்சமினமை, உளத்தூய்மை இன்மை, பெருமை, பொறாமை பேராசை,சுயநலம், உலோபத்தனம், அடுத்தவரை மதியாமை, பழிவாங்கும் மனப்பான்மை, விட்டுக் கொடாமை, அடுத்தவர் சுக துக்கங்களில் பங்கு கொள்ளாமை, அடுத்தவர் உணர்வுகளை மதியாமை, பகைமை பாராட்டல், அடுத்தவர் குறை தேடல், கோல் புறம் போய் பேசல், அகங்காரம்,அகம்பாவம், குரோதம்,நய வஞ்சகம் கோழைத்தன்மை, என கொடிய உளவியல் கோளாறுகள் நடத்தைகளில் பிரதிபலிக்கின்ற பொழுது மறுமை வாழ்வு மட்டுமல்ல இன்மை வாழ்வும் இருண்டு போய் விடுகின்றது.
நான் உயரிய பண்பொழுக்கங்களை நிறைவு செய்வதற்காகவே அனுப்பப்பட்டுள்ளேன் என அருமை நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் சொன்னதோடு அத்தகைய பண்பாடுகள் அற்றவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்றும் மிகத் தெளிவாக அழகாக பல செய்திகளை சொல்லியுள்ளார்கள்.
அதனால் தான் நன்மையான காரியங்களில் முந்திக் கொள்வோருக்கு இரட்டிப்பான நன்மைகள் இருக்கின்றன என அல் குரானும் ஹதீசுகளும் உணர்த்தி நிற்கின்றன, ஏனெனில் அதன் நல்ல பிரதிபலிப்புக்கள் அடுத்தவரிடம் இருந்து வெளிப்படுகின்ற பொழுது அவற்றிற்கான நன்மைகளில் எமக்கும் பங்கு இருக்கிறது.
சிறிய ஒரு உதாரணம்: நீங்கள் சந்திக்கும் ஒருவரை மலர்ந்த முகத்துடன் முஸ்லிம் ஆக இருந்தால் ஸலாம் சொல்லியும் பிர மதத்தவராக இருந்தால் ஒரு சிறந்த வளத்தையும் சொல்லி அதன் பிரதிபலிப்பை பார்த்துக் கொள்ளுங்கள்.. எடுத்ததெற்கெல்லாம் அடுத்தவரை குறை கூறும் நாம் எமது தனிப்பட்ட குடும்ப சமூக வாழ்வில் சுற்றுச் சூழலில் நிம்மதி சந்தோஷம் அங்கீகாரம் அமைதி சமாதனம் நிலவுவதனை பெரும்பாலும் நாமே தீர்மானித்துக் கொள்கின்றோம் என்பதனை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எங்களது விசுவாசம், இறையச்சம், நம்பிக்கைகள், ஆன்மீக பண்பாட்டு பக்குவங்கள், எங்களது வழிபாடுகள், தான தர்மங்கள், மனிதாபிமானம், உயரிய நற்குண நல ஒழுக்கங்கள், பணிவு, அடக்கம், பொறுமை, பெரும் தன்மை,விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், அடுத்தவர் உணர்வுகளை புரிந்து கொள்தல், உறவுகளை பேணுதல், பெற்றாரை உற்றாரை, கற்றாரை,பெரியாரை மதித்தல், கோபம் கொள்ளாமை, பொறாமை கொள்ளாமை, காழ்ப்புணர்வு, நயவஞ்சகமின்மை, நீதி , நேர்மை , உண்மை ,வாய்மை எல்லாமே எங்களது சொந்த சுக வாழ்விற்கும் சக வாழ்விற்கும் ஈருலக வெற்றியிற்கும் மாத்திரம் தான்.
அதேபோன்றே மேலே சொல்லப்பட்டவையின் எதிர்மறைகளும்…!
நாங்கள் தான் முழுமை பெறுகின்றோம்….இவற்றை ஏன் பேருக்காகவும் புகழுக்காகவும் செய்து பிரதிபலன்களை இழந்து கொள்ள வேண்டும்..? அதற்காகவே அல்லாஹ்விற்காக மாத்திரம் இறை திருப்தியை நாடி நாம் உளத்தூய்மையுடன் அவற்றை செய்கின்றோம், அந்த உளத் தூய்மையும் எங்களுக்குத்தான்…
அடியார்களிடம் அல்லாஹ்விற்கு எந்த வித தேவையும் கிடயாது….மாமிசங்களோ, இரத்தங்களோ அல்லாஹ்வை சென்றடைவதில்லை எண்ணங்களும் இறையச்சமுமே அவனை அடைகின்றன…
இவற்றில் குறைகள் ஏற்படுகின்ற பொழுது அல்லாஹ் எங்களை மன்னித்து விடலாம் ஆனால் ஒவ்வொரு ஆன்மாவும் தாம் சம்பாதித்துக் கொண்டவற்றின் பிரதிபலன்களை விளைவுகளை அனுபவித்தேயாக வேண்டும்.!
உதாரணமாக நாங்கள் நடந்து கொள்வதைப் போன்றே நடாத்தப் படுவோம்….விதைத்தவற்றையே அறுவடை செய்துகொள்ள முடியும்….புகைத்தல் பாவம் என்று தெரிந்தும் புகைக்கின்றோம்..அல்லாஹ் மன்னித்துவிடலாம்..ஆனால் புற்று நோய் வந்தால் அதனையும் நாம் பொருந்திக் கொள்ள வேண்டும்.
பின்னர் பாவ மன்னிப்பு தேடிக் கொள்ளலாம், இன்னும் வயது இருக்கிறது தானே, அல்லது இன்று மட்டும், என்றெல்லாம் உள்ளங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம், எமது தப்புத் தன்டாக்களுக்கு நியாயம் தேடிக் கொள்ளலாம்..ஆனால் விளைவுகளை பெரும்பாலும் இவ்வுலகில் சந்தித்து தானே ஆக வேண்டும்..!
உயரிய ஆன்மீக பண்பாட்டு பண்பொழுக்கங்களால் அழகிய மலர்களும், நறுமணங்களும் நிறைந்த நந்தவனங்களாக எமது வாழ்வின் வசந்தங்களை சொந்தமாக்கிக் கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ் எமக்கு தவ்பீக் செய்வானாக..!

