மனித வாழ்வில் அறிவும் ஆன்மாவும் உணர்வுகளும் அழகிய பண்பாட்டு விழுமியங்களை இயல்பாகவே தோற்றுவிக்கின்றன, உற்றார் பெற்றார் உறவினருக்கிடயிலான உறவுகள், அண்டை அயலவர் ஊரார் என ஒரு உயரிய சமூக பண்பாடுகள் , சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ற சமயோசிதங்கள், நலவு நஷடங்களில் இன்ப துன்பங்களில் பங்கெடுத்தல், இங்கிதங்கள்,விட்டுக் கொடுப்புக்கள், பெரும் தன்மைகள், முறுகல் நிலைமைகளில் கூட வரை முறைகள், நாவடக்கம் இவ்வாறு ஆயிரமாயிரம் வாழ்வியல் பெறுங்கள் பரம்பரை பரம்பரையாக பரம்பரியங்களாக இருந்து வந்துள்ளன.
ஆனால், இன்றைய அவசர உலகில் இத்தகைய உயரிய வாழ்வியல் குணாதிசியங்கள் வெறும் இலாப நஷ்டக் கணக்குகளோடு பொருளாதார பெருமானங்களால் மாத்திரம் கணிக்கப் படுகின்ற அளவுக்கு உள்ளார்ந்த -மென்பொருள்- சிதைவு நிலையை அடைந்துள்ளன.
மூன்று வயதாக முன்னரே குழந்தை பராமரிப்பு வியாபார நிலையங்களில், முன்பள்ளிக் கூட வியாபார கூடங்களில் தாய்ப் பாச அரவணைப்பு மறுக்கப் பட்டு அன்பு பரிவு அரவணைப்பு எல்லாமே விலைக்கு வாங்கப்படுகின்றன. அங்கு தொடங்கிய சித்திரவதைகள் பாடசாலைக் கல்வி உயர்கல்வி பகுதி நேர மேலதிக வகுப்புக்கள் என பிள்ளைகளையும் அவர்களோடு சேர்த்து பெற்றோர்களையும் பராக்காக்கி விடுவதனால் உற்றார் பெற்றார் உறவினர்கள் கூட சீசனுக்கு மட்டு தன என்று ஆகிவிட்டது.
எல்லோரும் சுத்த சுயநலமிகளாக தானுண்டு தனது வாழ்வுண்டு என வாழ்ந்து கொடிருப்பதால் இன்று குடும்பத்தில் பெரியவர்கள் தாய் வழி தந்தை வழி உறவுகள் மதிக்கப் படுவதில்லை அதற்கென நேரம் ஒதுக்க முடிவதுமில்லை, கல்யாணம் ஆகிவிட்டால் அக்கா தங்கை உறவுகள் அண்ணன் தம்பி உறவுகள் என்ன பெற்றார் பிள்ளை உறவுகள் கூட அந்நியமாய் போய் விடுகின்றன. பிள்ளைகளுக்கு கூட அவர்களது உறவு முறைகள் தெரியாமல் அண்ணன் தங்கை பிள்ளைகளோடு கூட அந்நியப்பட்டு கூச்சப் பட்டு நிற்கின்றார்கள்.
வாழ்வு பசுமை இழந்து வருகிறது, குடும்ப உறவுகள் எவ்வாறு இருக்கின்றன என்பதனை தொலைக்காட்சி தொடர்களிலே மனிதர்கள் பார்த்துக் கொள்கின்றார்கள், சிலர் வாழ்க்கையை தொலைக்காட்சி தொடர்களிலே நடித்துக் காட்டுகிறார்கள், அதைப் பார்த்து மட்டும் பழகிய பலர் தொலைக்காட்சி தொடர்கள் போல் வாழ்க்கையில் நடிக்கின்றார்கள்.
உறவு முறைகள் சீரழிந்து கொண்டிருக்கின்றன, கணவன் மனைவி உறவு குறுகிய காலத்திற்குள் கோடு நாடு சென்று விடுகின்றது, பிள்ளைகளுக்கு பெற்றார் தொல்லைகளாகவும், பெற்றாருக்கு பிள்ளைகள் தொல்லைகளாகவும் மாறி வருகின்றார்கள், நகர வாழ்க்கை நரக வழக்கையாக மாறி மனிதன் கடிகார முள்ளுடன் ஓடிக் கொண்டிருக்கின்றான், மனைவியும் தொழிலுக்காய் அல்லது தொலைக் காட்சிக்காய் கால நேரத்தை கணிப்பிட்டுக் கொண்டிருக்கின்றாள்.
பிள்ளைகளும் கற்கும் நேரம் போக வீட்டில் கட்டுண்டு கையில் இலத்திரனியல் விளையாட்டுக்களுடனும், இண்டர்நெட்டிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள், அவர்களது கைகளிலும் மொபைல் போன்கள், விருந்துக்காக ,விடுமுறைக்காக எங்கு சென்றாலும் அவர்களுக்கு உறவுகளைக் கண்டு கொள்ள நேரமில்லை எல்லோரும் அவரவரது லப்புகளோடும் டப்புகளோடும், மொபைல் போன்களோடுமாக ரொம்பவே பிஸியாகி விடுகிறார்கள்.
இனி வாழ்க்கைப் பாடங்களை கற்பிக்க வளவாளர்கள் வேறு எல்லா உணர்வுகளும் அறிவு மயமாகிக் கொண்டிருக்கின்றன:
பிள்ளை வளர்ப்பதெப்படி?
திருமணத்திற்கு முன் தம்பதிகளை தயார் படுத்தல்
சிறந்த குடும்பப் பெண்ணாக இருப்பது எப்படி?
சிறந்த குடும்பத் தலைவனாக இருத்தல் எப்படி?
மாமி மருமகள் உறவு.
அண்ணன் தம்பி அக்கா தங்கை உறவு முறைகள்.
பெற்றார் பிள்ளை உறவு முறை ஒரு இஸ்லாமிய பார்வை
குடும்ப உள வள ஆலோசனை…( கவுன்சலருக்கு கூட வீட்டில் ஆயிரத்து எட்டு பிரச்சினை)
மாணவர் ஆசிரியர் உளவள ஆலோசனைகள்…
அடேங்கப்பா ..வாழ்க்கையே இன்று விதவிதமான கோர்ஸ்களாக விற்கப் படுகின்றன..
உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு வாழ்க்கை பசுமை இழந்து வருகிறது, அன்று வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும் என்றார்கள் இன்று ஆயிரமாயிரமாய் இருக்க வேண்டும் என்பதில் மட்டுமே மனிதன் குறியாய் இருக்கின்றான்.
உள்ளவர்கள் கூட ஒரு உறவை சென்று சந்திப்பதற்கு ஆயிரம் முறை கணக்குப் பார்க்கிறார்கள், உறவுகளின் பெறுமதி வெறும் ஆயிரங்களால் மாத்திரமே கணிக்கப் படுகின்றன, இல்லங்களில் வரவேற்பறைகளின் விசாலம் உள்ளங்களில் இருப்பதில்லை!மனிதன் பொருளாதாரப் பிராணியாய் மாறிக் கொண்டிருக்கின்றான்.
ஆன்மீக பண்பாட்டு வறுமை அவனை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது.நாம் வாழ்வதற்காக உழைக்கின்றோமா ? அல்லது உழைப்பதற்காக வாழ்கின்றோமா ? என்ற அடிப்படி தெளிவுகூட இல்லாமல் மனிதன் எங்கெங்கெல்லாமோ வாழ்வை தொலைத்து விட்டு வேறு எங்கோ தேடிக் கொண்டிருக்கின்றான்.!
மனிதனைப் படைத்தவுடன் “இரத்த பந்த உறவு முறை” ( தெளிவுக்காக உருவகப் படுத்தப் பட்டுள்ளது) அல்லாஹ்வைப் பார்த்து அபயம் தேடுவது போல் கேட்டதாம் யா அல்லாஹ் எனது நிலை என்ன ? “நிச்சயமாக உன்னைத் துண்டித்தவர்களை நான் முழுமையாக துண்டித்துக் கொள்வேன் ” அவர்களது எந்த வணக்க வழிபாடுகளும், நல்ல கருமங்களும் அங்கீகரிக்கப் பட மாட்டது அவை வானத்திகும் பூமியிற்கும் இடையில் தடைப் பட்டிருக்கும் என்ற நபி மொழி (கள்) எவ்வளவு ஆழமான வாழ்வியல் தத்துவத்தை தன்னகத்தே கொண்டிருக்கின்றன என்பதனை பாருங்கள்.
“புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்;. இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்)” (சூரத்துல்பகரா 177)
“மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனுக்கு அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும் அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும் எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள். மேலும் இரத்த பந்த உறவுகளைச் சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்”. (சூரத்துன் நிஸ்ஸாஉ 4:1)
இரத்த உறவைப்பேணுவது வெறும் சமூகக் கட்டமைப்பிற்காக மட்டும் அவசிய மானதல்ல. இஸ்லாமிய நோக்கில் இது ஈமானின் அம்சங்களில் ஒன்றாகும்.
“யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
அல்லாஹ்வுடன் தொடர்பு :
ஏற்கனவே இரத்த உறவு என்பது அல்லாஹ்வின் தெரிவு என்று கூறினோம். இந்தத் தெரிவை ஏற்று மதிப்பதன் மூலமாக எமக்கு அல்லாஹ்வுடன் தொடர்பு உண்டாகின்றது.
அல்லாஹுதஆலா இரத்த உறவைப் பார்த்து “யார் உன்னைச் சேர்ந்து நடக்கிறானோ நான் அவனைச் சேர்த்துக் கொள்வேன். யார் உறவைத் துண்டித்துக் கொள்கின்றானோ நான் அவனுடன் தொடர்பைத் துண்டித்து விடுவேன்” என்று கூறினான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! என்னைச்சுவனத்தில் நுழைவித்து நரகத்தை விட்டும் தூரமாக்கக் கூடிய ஒரு அமலைஎனக்குச் சொல்லித் தாருங்கள் என்றார் அதற்கு நபி(ஸல்) அவர்கள்,
“நீ அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணைவைத்து விடாதே! தொழுகையை நிலை நிறுத்து, ஸகாத்தும் கொடுத்துவா, குடும்ப உறவைப் பேணிக்கொள்” என்றார்கள்.
அறிவிப்பவர் : ஹாலித் இப்னு ஸைத் அல் அன்ஸாரி(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
“யார் தனக்கு றிஸ்கில் விஸ்தீரணத்தையும் நீண்ட ஆயுளையும் விரும்புகின்றாரோ அவர் அவர் இரத்த உறவைப் பேணிக்கொள்ளட்டும்.
அறிவிப்பவர் : அனஸ்(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
“தன்னுடன் இணைந்து இருப்போருடன் சேர்ந்து நடப்பவன் இரத்த உறவைப்பேணுபவனல்ல. உண்மையில் தன்னுடன் உறவைத் துண்டித்தாலும் உறவு பேணுவதே இரத்த உறவைச் சேர்ந்து நடப்பவனாவான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ்(ரலி), ஆதாரம் : புகாரி
இதே நிலையை ஒரு தோழர் நபி(ஸல்) அவர்களிடம் இவ்வாறு முறையிட்டார்.
“எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் ஒட்டி நடந்தால்அவர்கள் வெட்டிச் செல்கின்றனர். நான் அவர் களுக்கு நன்மை செய்கின்றேன்.அவர்களோ எனக்குத் தீமை செய்கின்றனர். நான் அவர்களுடன் கருணையுடன் நடந்து கொள்கின்றேன். அவர்கள் என்னுடன் கடுமையாக நடந்து கொள்கின்றனர் என்றார். அதற்கு நபியவாகள், நீ கூறுவது போல் நீ நடந்து கொண்டால் அல்லாஹ்விடமிருந்து ஒரு உதவியாளர் உனக்கு நியமிக்கப்பட்டிருப்பார்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
ஆதாரம் : முஸ்லிம்
எனவே, முடிந்தவரை அனைவரையும் நாம் அணுசரித்து, விட்டுக்கொடுத்து இணங்கிச் செல்ல முயல வேண்டும். இதுவே, உண்மை யான இரத்த பந்தமாகும்.
காஃபிரான உறவு :
எமக்கு காஃபிரான இரத்த உறவு இருந்தாலும் அவர்களுக்குரிய அந்தஸ்த்தைக்கொடுக்க நாம் தயங்கக் கூடாது. இதில் இஸ்லாம் எவ்வளவு தூரம் விசாலமாகச் சிந்திக்கின்றது என்பதைப் பின்வரும் அறிவிப்பு உணர்த்துகின்றது.
“நீங்கள் நிச்சயமாக எகிப்தைக் கைப்பற்றுவீர்கள் அப்போது அவர்களுடன் மிகஇங்கிதமாக நடந்து கொள்ளுங்கள். ஏனெனில், உங்களுக்கு அவர்களுடன் குடும்ப உறவும் – திருமண உறவும் உள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர்(ரலி)
ஆதாரம் : முஸ்லிம்
இஸ்மாயில்(அலை) அவர்களின் தாயார் அன்னை ஹாஜரா அவர்கள் கிப்திஇனத்தவராவார். அவ்வாறே நபி(ஸல்) அவர்களின் மகன் இப்றாஹிமின் தாய் மரியதுல் கிப்தியாவும் இந்த இனத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். இதனையே நபி(ஸல்) அவர்கள் மேற்குறித்த நபிமொழியில் குறிப்பிட்டார்கள். தனக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஹாஜரா அவர்களின் குடும்ப உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எதிர்காலத்தில் நடந்து கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்றால் எமது உடன் பிறப்புக்கள், எமது பெற்றோரின் உடன் பிறப்புக்கள், அவர்களுடைய குழந்தைகளுடன் நாம் எவ்வளவு இங்கிதமாக நடந்துகொள்ளப் பணிக்கப்பட்டுள்ளோம் என்பதை எண்ணிப்பார்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அத்துடன் நபி(ஸல்) அவர்கள் இதனைக் கூறும் போது அந்த கிப்தி இனத்தவர் கிறிஸ்தவர்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

