அல்லாஹ்வின் கலாமைக் கொண்டு மஸ்ஜிதுகளை ஹயாத்தாக்குகின்ற உயரிய இலட்சியப் பணிக்கு அணி திரள்வதன்வதன் மூலம் ஊர்களையும் உள்ளங்களையும் ஒளி பெறச்செய்வோம், உம்மத்தின் கண்ணியம் அல்-குர்ஆனின் பால் மீள்வதில் மாத்திரமே தங்கி இருக்கின்றது.
“உங்களுக்கு நிச்சயமாக நாம் ஒரு வேதத்தை அருளியிருக்கின்றோம்; அதில் உங்களின் கண்ணியம் இருக்கின்றது. நீங்கள் அறிய மாட்டீர்களா?” (ஸுரதுல்அன்பியா 21:10)
“நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம், எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா? ” ( ஸுரத்துல் கமர் 54:32)
“(நபியே!) நாம் ஒரு மலையின் மீது இந்த குர்ஆனை இறக்கியிருந்தோமானால், அல்லாஹ்வின் பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர்; மேலும், மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களை நாம் அவர்களுக்கு விளக்குகிறோம்”( ஸுரத்துல் ஹஷ்ர் 59:21)
“உங்களில் மிகச் சிறந்தவர் அல்-குரானைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவனாகும்”
மேற்படி நபி மொழி எவ்வளவு கருத்தாளம் மிக்கது, பிரபஞ்சத்தையும் அதில் உள்ள அத்தனையையும் படைத்து இயங்கச் செய்து பரிபாலித்துக் கொண்டிருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கலாமை தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுக்கும் ஒருவனை அல்லது ஒருத்தியை விட சிறந்தவர் யார் இருக்க முடியும்.
“அலிஃப், லாம், றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும். நீங்கள் விளக்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆன் நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம். ” ( ஸுரத்து யூஸுப் 12:1,2)
விஞ்ஞானமும், அறிவும், ஆராய்ச்சியும், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியும் அதிகரித்து,ஊருக்கு ஊர் வீட்டுக்க்கு வீடு உலமாக்களும், அறிஞர்களும் இருக்கின்ற இந்த யுகத்தில் மிக்கச் சிறிய அத்தியாயங்களைக் கூட பொருளுணர்ந்து ஓத முடியாது எங்களில் எத்தனை பேர் இருக்கின்றோம்.
“மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? ” ( ஸுரத்து முஹம்மத் 47:24)
எங்கள் மஸ்ஜிதுகள் அல்-குரான் கற்கைகளால் அலங்கரிக்கப் படாமைக்கான காரணங்கள் என்ன, எவ்வாறான தடைகள் இருக்கின்றன என்பதனைக் கண்டறிந்து அவசரமாக ஆவன செய்வது சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினர் மீதும் கடமையாகும்.
“இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.”(அல்-பகறா 2:114)
ஒரு காலத்தில் இலங்கையில் தகுதி வாய்ந்த உலமாக்கள் இருக்கவில்லை, இன்று சுமார் 250 அறபு இஸ்லாமிய ஜாமியாக்கள், குள்ளியாக்கள், மதரசாக்கள் இருக்கின்றன, வருடா வருடம் சுமார் 2500 ஆலிம்கள் ஹாபிஸுகள் உருவாக்கப் படுகின்றார்கள்.
ஏன் இத்தகைய உலமாக்களைக் கொண்டு குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது ஆண்களுக்கும், பெண்களுக்கும் அல்-குரான், அல்-ஹதீஸ், அல்- பிக்ஹு, அல்-ஸீரா வகுப்புக்களை, மஜ்லிஸ்களை எங்களால் நடாத்த முடியாமல் இருக்கின்றது.?
“(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் – அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும். ” (ஸுரதுஸ் ஸாத் :38:29)
“உங்களுக்கு நிச்சயமாக நாம் ஒரு வேதத்தை அருளியிருக்கின்றோம்; அதில் உங்களின் கண்ணியம் இருக்கின்றது. நீங்கள் அறிய மாட்டீர்களா? ” (ஸுரதுல் அன்பியா 21:10)
தோழர்களே புறப்படுங்கள்..கோளாறு எங்கே இருக்கிறது என்று பாருங்கள்..!
அல்குரான் அருளப்பட்டதால் ரமழான் மாதம் புனிதம்,மகத்துவம் பெற்றது.
அல்குரான் அருளப்பட்டதால் ரமழான் மாதம் புனிதம்,மகத்துவம் பெற்றது, லைலதுல் கத்ர் ஆயிரம் மாதங்களை விட சிறப்படைந்தது, எங்கள் உயிரிலும் மேலான முஹம்மத் (ஸல்) அவர்கள மீது அல் குரான் அருளப்பட்டு அகிலத்தாருக்கு இறுதி இறைதூதரை அறிமுகப்படுத்திய புனிதமிகு மாதம். இது அல் குரானுடயதும் அல் சுன்னாஹ் வினதும் மாதமாகும்.
“ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது.
ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).”
(ஸுரத்துல் பகறா:185)