O வாழ்க்கைப் பாடம்: சில உணர்வலைகள்
சுகமான சுமைகளும், இனிதான அனுபவங்களும்..
நான் அன்பு வைத்துள்ளோர் சந்தோஷத்திற்காக எனது ஆசாபாசங்களையெல்லாம் கனவுகளோடு மட்டுமே மட்டுப் படுத்திக் கொண்டேன், பலர் என்னை புரிந்து கொள்ள மறுக்கின்ற பொழுதுகளிலும் கூட.
என்மீது பொறாமை கொள்வோர் சந்தோஷப் பட்டுக் கொள்ளட்டும் என்பதற்காக நானும் பல அவமானங்களை உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டேன்.
என்னோடு போட்டியிட வந்தோர் அடைந்து கொள்ளட்டும் என்று விரும்பியே நான் பல தோல்விகளை எனதாக்கிக் கொண்டுள்ளேன்.
என்னைவிட தேவையுடையவர் அடைந்து /பெற்றுக் கொள்ளட்டும் என்பதற்காக பல அரிய சந்தர்ப்பங்களை நழுவ விட்டுள்ளேன்.
வேண்டப்படாதவன் என சபைகளில் உணரப் பட்ட புரியப்படாத தருணங்களில் எனக்குள் புதையுண்டு நானாகவே விலகிச் சென்றுள்ளேன்.
முண்டியிடுவோர் முன்வரிசையில் இருந்து கொள்ளட்டும் என்பதற்காக நான் பின்வாரிசையில் அமர்ந்து கொள்வேன்.
உண்மை என்பக்கம் இருந்த போதும் விளைவுகளை எண்ணி வாதப் பிரதி வாதங்களை நான் தவிர்ந்து கொண்டேன்.
சிலரது உதவி இல்லாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் இருந்து விடக் கூடாது என்பதற்காக பணிந்து / கடந்து சென்றுள்ளேன்.
நான் நேசிக்கின்றவர்கள் மீது களங்கம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக எனது பக்க நியாயங்களை பேசாது மௌனமாக இருந்திருக்கின்றேன்.
தற்காலிக கோப தாபங்களை விட நிரந்தரமான உறவுகள் முக்கியம் என்பதற்காக ஆக்ரேஷங்களுக்கு முன்னால் கோழை போல் அடங்கிப் போயிருக்கின்றேன்.
எனது துயரில் களிப்புற்றோர் துயர்கண்டு துவண்டு போனேன், கை கொடுத்த எந்தன் விரல்களை தொலைத்து நின்றுள்ளேன்.
விதை விதைத்து, நீரூற்றி, பசளையிட்டு களையகற்றி காணி செய்வேன், கைகட்டிப் பார்த்து நின்று அறுவடைக்காய் உரிமை கோரும் அசிங்கங்கள் கண்டு அமைதியாய் இருந்துமுள்ளேன்.
னது காலை வாருகிறார்கள் என்று தெரிந்த பொழுதும் அவர்கள் தலையை நான் வருடுகின்றேன்.
எந்தவொரு விட்டுக் கொடுப்பும் இன்றுவரை எனக்கு இழப்பாக தெரியவே இல்லை, மாறாக அடைவுகளாகவே இன்னும் எண்ணிக் கொண்டிருக்கின்றேன்.
புரியப்படாத பொழுதுகளில், தனிமைப்படுத்தப் பட்ட பொழுதுகளில், அவமானங்கள் தாங்கி நின்ற பொழுதுகளில் அல்லாஹ் என்னுடன் இருப்பதை அதிகமாக உணர்ந்தேன்.
இவ்வாறு நீங்கள் உணர்கின்ற சந்தர்ப்பங்கள் அதிகம் இருக்கும் என நினைக்கின்றேன்.
நானும் ஒரு சராசரி தனி மனிதனே.
இன்று நான் எந்த ஒரு அரசியல் கட்சியிலோ வேறு ஏதேனும் இயக்கத்திலோ அல்லது தொண்டர் நிறுவனத்திலோ உறுப்பினர் இல்லை, நான் பெற்றுக் கொண்ட கல்வி, எனது கடந்த கால் நூற்றாண்டு கால பொது வாழ்வில் நான் கற்றுக் கொண்ட அனுபவங்கள் என்பவற்றின் பின்புலத்தில் முஸ்லிம் சமூகம் தேசம் சார்ந்த விடயங்களில் வாழ்வியல் விழுமியங்களில் அவ்வப் போது எனது கருத்துக்களை அறிக்கைகளாகவும் ஆக்கங்களாகவும் வெளியிட்டு வருகின்றேன்.
அரசியல் வட்டாரங்களிற்கு எனது இஸ்லாமிய நிலைப்பாடுகள் பிடிக்கவில்லை, இஸ்லாமிய வட்டாங்களிற்கு எனது அரசியல் நிலைப்பாடுகள் பிடிக்கவில்லை..கடந்த கால் நூற்றாண்டு காலமாக இரு சாராரும் என்னை தீண்டத் தகாதவனாக தள்ளி வைத்தே உறவை அளவோடு வைத்திருக்கின்றார்கள்.அதனால் தான் எந்த அரங்குகுகளிற்கும் அழைக்கப் படுவதுமில்லை.
என்றாலும், எனது சிந்தனைகளை கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் நாளைய தலைவர்கள் உருவாக்கப் படுவதில் ஒரு சிறு பங்களிப்பையேனும் நானும் செய்ய வேண்டும், அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற இலக்கிலேயே எழுதிக் கொண்டிருக்கின்றேன்.. வெறும் எழுத்துக்களோடு நின்று விடாமல் தொடர்ந்தும் அரசியல் சிவில் சமூக சன்மார்க்க பணிகளில் என்னால் இயன்றவரை ஈடுபட்டுக் கொண்டிருப்பதனையும் நீங்கள் அறிவீர்கள். அல்ஹம்துலில்லாஹ்.
எனது பேச்சிலும் எழுத்திலும் செயற்பாடுகளிலும் புதிய தலைமுறையினருக்கு ஏதேனும் பயன்கள் இருக்கவேண்டும் நாளைய தலைவர்கள்உருவாக்கப் படவேண்டும் என்ற ஒரே எண்ணம் மாத்திரமே இருக்கின்றது. அதேவேளை அரசியல் சிவில் சன்மார்க்கத் தலைமைகளுக்கு அவ்வப் போது சொல்லப் படவேண்டிய விஷயங்களும் அவற்றுள் அடங்குகின்றன.
எனக்கு கட்சி அமைக்கின்ற, இயக்கம் நடத்துகின்ற, பேரும் புகழும் பிரபல்யமும் தேடுகின்ற அவற்றை வைத்து நானும் எனது குடும்பமும் எமது வாழ்வாதார தேவைகளை ஆசைகளை அடைந்து கொள்கின்ற அமானிதங்களை பாழ் படுத்துகின்ற எந்த தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலும் கிடையாது.
அவ்வாறான நிகழ்ச்சி நிரல்கள் இருந்தால் அதிகாரத்திலுள்ள எனது அரசியல் சகாக்களின் பின்னால் வாய் மூடி மௌனியாக இருந்தால் மட்டுமே போதும் என்பது உங்களில் அனேகமானோருக்குத் தெரியும். அதனால் தான் எனக்குத் தெரிந்த ஒரு சில வியாபார நடவடிக்கைகளுடன் எனது தனிப்பட்ட வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கின்றது.
நானும் ஒரு சராசரி தனி நபர் மாத்திரமே, எனக்கென்று எனது சக்தியிற்கும் அறிவிற்கும் உற்பட்ட சில வரையறைகள் இருக்கின்றன, இந்த சமூகத்தினதும் தேசத்தினதும் எல்லா விவகாரங்களிலும் கருத்துச் சொல்லவும் அறிக்கை விடவும் என்னால் முடியாது.
தயவு செய்து மக்களது வரிப்பணத்தில் நியமனம் பெற்றுள்ள உங்களால் நியமிக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் அல்லது ஆளும் கட்சி எதிர்க் கட்சி அரசியலில் இருக்கின்ற செய்ற்பட்டாளர்களிடம் அல்லது ஏதேனும் இயக்கங்கள் தொண்டர் நிறுவனங்களிடம் நீங்கள் எதிர்பார்க்கின்ற பணிகளையோ அறிக்கைகளையோ அரசியலையோ என்னிடம் எதிர்பார்க்காதீர்கள்.
எனக்கு அறிஞனாக நடிக்கும் ஆர்வமோ, அல்லது ஏதேனும் ஒரு நிறுவனத்தை கட்டி ஆளவேண்டும் என்ற நப்பாசையோ, அல்லது அரசியல் சன்மார்க்க அல்லது சிவில் சமூகத் தலைவனாக ஆக வேண்டும் என்ற என்னமோ அறவே கிடையாது அதேபோல் பாராளுமன்றம் செல்வதற்காக வீடு வீடாக சென்று வாக்குப் பிச்சை கேட்டு பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசவோ என்னால் முடியாது, ஒரு போஸ்டர் என்ன நான் எழுதிய ஆக்கங்களை பிரதி பண்ணவோ என்னிடம் வளங்கள் இல்லை.
என்னால் இயன்ற வரை இந்த நாட்டில் சிவில் அரசியல் மற்றும் சன்மார்க்கத் தலைமைகளுடன் இதுவரை எந்தவொரு பிரதி உபகாரமும் பெறாமல் ஒத்துழைத்து வருகின்றேன். நான் ஒரு மகானோ மகாத்மாவோ இல்லை, எனது கருத்துக்களை சிந்தனைகளை எவர் மீதும் திணிக்கும் தேவையும் எனக்கு கிடையாது. ஊடகங்களுக்குப் பின்னால் பிரபல்யங்களுக்குப் பின்னால் அலைந்து திரியவும் நான் விரும்புவதில்லை.
எனது வாழ்வும் பணியும் மரணமும் அல்லாஹ்வின் திருப்தியை அங்கீகாரத்தை எனக்குப் பெற்றுத்தர வேண்டும், நாளை நான் மீள் அழைக்கப் படுகின்ற பொழுது அமானிதங்களை பேணி வாழ்ந்த, கடமைகளை பொறுப்புக்களை இயன்ற வரை சரியாக நிறைவேற்றியவனாக செல்ல வேண்டும்.
எனது கப்ருடைய வாழ்வும் மஹ்ஷரும் மறுமையும் இறை நேசர்களுடைய வாழ்வாக இருக்க வேண்டும், அங்குதான் நான் VIP யாகவோ அல்லது VVIP யாகவோ நபிமார்களுடனும் ஷுஹதாக்களுடனும் ஸாலிஹீன்- களுடனும் இருக்க வேண்டும்.
இன்றுவரை பல்வேறு சந்தர்ப்பங்களில் தனிமைப் படுத்தப் பட்ட பொழுதும் நியாய தர்மங்களைப் பேணி பொது வாழ்வில் எனது காத்திரமான பங்களிப்பை செய்து வருகின்றேன், இன்ஷா அல்லாஹ் இனியும் செய்வேன், விமர்சனங்களுக்கோ அச்சுறுத்தல்களுக்கோ நான் ஒரு பொழுதும் அஞ்சுபவன் அல்ல என்பது உங்களில் பலருக்குத் தெரியும். எனது பாதையும் பயணமும் தெளிவானது, எனது சொல்லும் செயலும் அழைப்பும் பணியும் அல்லாஹ் ஒருவனின் திருப்தியை நாடியவை.
பொது வாழ்வில் என்னை நேசிக்கின்ற பலர் இருப்பது போல் விமர்சிப்பவர்களும் இருக்கின்றார்கள் அவர்களுள் பலரும் எனது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் குறித்து குறிப்பாக அரசியல் குறித்து அறிய ஆவலாய் இருப்பதனை நீண்ட காலமாக அவதானித்து வருகின்றேன், எனது இந்தப் பதிவு உங்களுக்கு போதுமான தெளிவினை வழங்கியிருக்கலாம். ஏனையவற்றை அல்லாஹ்விடம் விட்டு விடுவோம். இன்ஷா அல்லாஹ் ..!
விமர்சனங்கள் அமானிதங்கள் என்பதனை மனதில் வைத்துக் கொள்ளுங்கள், என்னை விமர்சிப்பதற்கு பலருக்கு நியாயங்கள் இருக்கலாம், ஆனால் சமூகத்தை விற்றுப் பிழைக்கும், வக்பு சொத்துக்களை நிறுவனங்களை பாழ் படுத்தும், அரச பணிகளை துஷ்பிரயோகம் செய்யும் ,இலஞ்சம் ஊழல் மோசடிகளில் கொடிகட்டிப் பறக்கும் பலரை அரியாசனங்களில் ஏற்றி வைத்து விட்டு சமூகத்தின் தேசத்தின் நலன்களுக்காக பேசும் எழுதும் சிந்திக்கும் நல்ல உள்ளங்களை அக்கு வேறாக ஆணி வேராக வேர் அறுக்கும் அதி மேதாவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதனையும் மறந்து விடாதீர்கள்.
எங்களது அன்புப் பெற்றோர்..
எங்களது அன்புப் பெற்றோர், வாப்பா மஸிஹுத்தீன் 1935 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டம் ஹபுகஸ்தலாவை கிராமத்தில் உதுமான் லெப்பை ஆலிம் சாஹிபு மற்றும் ஸுலைஹா உம்மா தம்பதிகளின் புதல்வனாக பிறந்தவர், ஆசிரியராக பல பாடசாலைகளில் கடைமையாற்றி இறுதியாக ஹபுகஸ்தலாவைக்கு அண்மிய அஹஸ்வெவ நு/அல்காஹிரா வித்தியாலயத்தின் அதிபராக பணியாற்றி ஓய்வு பெற்றார், 2006 ஜூலை 25 இல் வபாஃத் ஆனார்.
உம்மா ஆமினா மஸிஹுத்தீன் வாப்பாவுடன் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர், அவர் 1938 ஆம் ஆண்டு கண்டி மாவட்டம் தெல்தோட்டை ரலிமங்கொடை கிராமத்தில் காதர் மீரா சாஹிபு காதர் பீபி தம்பதிகளின் புதல்வியாக பிறந்தவர்.
அல்ஹம்துலில்லாஹ், இருவரும் தாம் சார்ந்த இரு குடும்ப உற்றார் உறவினர்கள் அனைவரையும் அரவணைத்து அனுசரித்து எல்லோரது அன்பையும் கௌரவத்தையும் வென்று எங்களுக்கெல்லாம் மிகவும் முன்மாதிரியாக இருந்தவர்கள், இன்னும் அதேபோன்று தாயாரும் இருதரப்பு பாரம்பரியங்களையும் பேணி எங்களையும் வழி நடாத்திக் கொண்டிருப்பவர்.
எல்லாம் வல்ல அல்லாஹ் எமது தந்தையின் நன்மையான காரியங்களை சேவைகளை அங்கீகரித்து பாவங்களை மன்னித்து மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்கியருள நீங்களும் என்னுடன் பிரார்த்திப்பீர்கள் என நம்புகின்றேன், அதேபோல் இன்னும் பல ஆண்டுகள் சிறந்த ஆரோக்கியத்துடனும் நல்ல அமல்களுடனும் தாயாரும் வாழவும் பிரார்த்திக்கின்றோம்.
அவர்களுக்கு நாங்கள் நான்கு பிள்ளைகள், மூத்தவர் அனஸுல்லாஹ் தற்பொழுது கொத்மலை பிரதேச சபை உறுப்பினர், அடுத்தது நான் மூன்றாவது நயீமுல்லாஹ் முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினர், தற்பொழுது நீதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர், நான்காமவர் தங்கை ஆயிஷா கம்பளை சாஹிராக் கல்லூரியில் ஆசிரியை, நாங்கள் அல்லாது உம்மா வாப்பாவின் குடும்பத்தை சேர்ந்த பலரும் எங்கள் குடும்ப உறுப்பினர்களாகவே வளர்ந்து இன்னும் வாழ்கின்றனர். குறிப்பாக இருவர் தொடந்தேர்ச்சியாகவே எங்கள் குடும்ப அங்கத்தவர்களாகவே இருக்கின்றனர் ஒருவர் நிசார் நானா மற்றவர் திப்பிடியவில் வசிக்கும் குறைஷியா தாத்தா.
இன்று உலகின் பல பாகங்களிலும் பல்வேறு அறிஞர் பிரமுகர்களை எல்லாம் சந்தித்து அவை குறித்து பதிவேற்றும் எனக்கு எமது வாழ்வின் அதிமுக்கிய பிரமுகர்கள் குறித்து ஒரு பதிவை இடாமல் இருப்பது பெரும் குறையாகவே இருந்தது.
“என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!”
இந்தப் படத்தில் நானும் சகோதரர்கள் அனஸுல்லாஹ் Masihudeen Anasullahநயீமுல்லாஹ் Naeemullah Masihudeen தங்கை ஆயிஷா Ayesha Binth Maseehஆகியோர் இருக்கின்றோம். என்னை அடையாளம் காட்ட முடியுமா ?
கொத்மலை அஹஸ்வெவ காஹிரா வித்தியாலய அதிபர் விடுதியில் வசிக்கும் காலத்தில் இந்த படம் எதுக்கப் பட்டிருக்கின்றது, அந்தக் காலத்தில் கருப்பு வெள்ளை படங்கள் மாத்திரமே அதுவும்..ரொம்ப அரிதாக…1970 இல் எடுத்திருக்கலாம்.
அன்பிற்குரிய சகோதரர் ஸிராஜ் மஷ்ஹூர் அவர்களின் பின்னூட்டம் :
உங்கள் அறிவு முதிர்ச்சியிலும் அனுபவ வெளியிலும் நாங்கள் கற்றுக் கொள்ள அதிகம் இருக்கிறது. புரியாதவர்கள், உள்நோக்கம் கொண்டவர்கள் உங்களை அவமானப்படுத்தலாம். ஆனால், எங்கள் மனசில் உங்களுக்கு உரிய இடமும் மதிப்பும் எப்போதும் இருக்கிறது.
உங்களை ஒரு மரியாதைக்காக ஷெய்க் என்று அழைத்தாலும், ஒரு நானாவாக- எங்கள் ஊர்ப் பாஷையில் சொன்னால் காக்காவாக – மூத்த சகோதரனாக உணர்ந்த தருணங்களே அதிகம். இடைவெளி இல்லாமல் நெருக்கத்தோடு பழகும் இயல்பு, ஹாஷ்யம் இழையோடும் உங்கள் பேச்சு பலரிடம் காணக் கிடைக்காத, நான் ரசிக்கும் உங்கள் பண்புகள்.
ஆனானப்பட்ட ஜாம்பவான்கள் எல்லாம் பிரயோக அறிவு குன்றி, கருத்தியலுக்குள்ளும் கோட்பாட்டுக்குள்ளும் இறக்குமதிக்குள்ளும்- கூர்ந்து வாசியுங்கள்: ‘இறக்கு ‘ ‘மதி’ க்கு உள்ளும் சிறைப்பட்டிருந்தபோது, இந்த மண்ணின் நடைமுறைத் தேவையினது முக்கியத்துவத்தை, உங்கள் அளவுக்கு உணர்ந்து செயற்பட்டவர்கள் மிக அபூர்வம்.
பலர் தீண்டாத தகாதவை என்று பார்த்த விடயங்களை- குறிப்பாக அரசியலை- நீங்கள் அணுகிய விதமும், அதன் காலப் பொருத்தமும் மிகவும் முக்கியமானது.
இப்போது இந்த சமூக ஊடக வெளியில், புதிய தலைமுறையினரோடு நீங்கள் பேசும், பகிரும் விடயங்கள் மிகவும் முக்கியமானவை. அவசியமான தருணங்களில் நீங்கள் வெளியிடும் கருத்துக்கள் உங்கள் பெறுமதியை இன்னும் அதிகரிக்கிறது. ஆங்காங்கே, ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒட்டு மொத்தத்தில் பல விடயங்களில் உங்கள் அலைவரிசையும் எங்கள் அலைவரிசையும் ஒன்றுதான்.
விமர்சனங்களாலும் அவமானப்படுத்தல்களாலும் சோர்ந்து விடாதீர்கள். உங்களைப் போன்றவர்களது பங்களிப்பு மிகவும் முக்கியம். அதிலும் கருத்தாழத்துடன் எழுதுபவர்கள் குறைவாக உள்ள நமது சமூக வெளியில், நீங்கள் நேசிக்கப்படுவீர்கள்; மதிக்கப்படுவீர்கள்; நன்றி பாராட்டப்படுவீர்கள்.