Saturday, April 18, 2026

பிழையான அரசியல் கலாச்சாரத்திற்கு எதிராகவே நாம் குரல் எழுப்புகின்றோம்!

பிழையான அரசியல் கலாச்சாரத்திற்கு எதிராகவே போராடுகின்றோம், தனி நபர்களுடனும், குழுக்களுடனும் பகைமை பாராட்டுவது எமது இலக்கு அல்ல.

VOICEநாங்கள் ஒரு பிழையான, கையாலாகாத, ஊழல் மோசடிகள் நிறைந்த, அநீதிகள் அடாவடித்தனங்கள் கோலோச்சுகின்ற வங்குரோத்து, சூதாட்ட, சரணாகதி அரசியல் கலாச்சாரத்திற்கு எதிராகவே எழுந்து நிற்கின்றோம், குரல் கொடுக்கின்றோம்.

மேற்படி ஜாஹிலிய அரசியல் கலாச்சாரத்தில் இருந்து, எமது அரசியல் குழுக்களையும், பிரமுகர்களையும், தனியாட்களையும் விடுவிப்பதென்பது ஒரே இரவுடன் அல்லது பகலுடன் நடந்து முடிகின்ற கைங்கரியமல்ல.

ஜனநாயக அரசியல் கட்டமைப்பில் ஒவ்வொரு பிரஜையும் பொறுப்புக்கூறும் கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர், அந்தவகையில் வாக்காளர்கள் மத்தியில் மேற்படி ஜாஹிலிய அரசியல் கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எமது முதற்கட்ட பணியாகிறது.

ஜாஹிலிய அரசியல் கலாச்சாரத்திற்கெதிராக போராடும் பொழுது அதன் முகவர்களோடும், அடியாட்களோடும் அல்லது பாமரத்தனமான ஆதரவுத் தளத்துடனும் மோதிக்கொள்கின்ற, அதிதீவிர முரண்பாட்டு எதிர்வினை-யாற்றல்கள் எமது பாதையினை குறிப்பாக இளம் தலை முறையினரை வேறு திசைகளை நோக்கி திருப்பி விடும் அபாயமும் இருக்கின்றது.

அதிலும் குறிப்பாக சிறுபான்மைச் சமூக தனித்துவ அடையாள அரசியல் இன மத மொழி வேறுபாடுகளை அல்லது உரிமைப் போராட்டங்களை மையப்படுத்திய அரசியல், நாடுதழுவிய பெரும்பான்மை சமூகங்களின் பிழையான அரசியல கலாச்சாரத்தில் சங்கமித்து இரண்டறக் கலந்திருக்கின்ற நிலைமைகளில் அதி தீவிர முரண்பாட்டு அணுகுமுறைகள், எங்கள் இலட்சியப் பயணத்தில் பாரிய தடைக் கற்களை, நெருக்கடிகளை ஏற்படுத்திவிடும் அபாயம் இருக்கின்றது.

இவாரனதொரு பாரிய பணியை முன்னெடுக்கும் பயணத்தில் புத்திஜீவிகள், கல்விச் சமூகம், இளைஞர்கள், யுவதிகள், பல்கலைக் கழக மாணவர் சமூகம், சன்மார்க்க அறிஞர்கள், வர்த்தக சமூகத்தினர் என சகல தரப்பினரும் கூட்டுப் பொறுப்புடன் இணைந்து செயற்படுகின்ற அவசியம் இருக்கின்றது, குறிப்பாக ஜனநாயக அரசியல் கட்டமைப்பில் ஊடகங்கள் முதன்மையான பங்களிப்பினை செய்தல் கட்டாயமாகும்.

VOTE1மனிதர்களின் உணர்ச்சிகளை தூண்டிவிடுகின்ற ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள், கருத்து வெளியீடுகள் வன்முறைகளைத் தூண்டிவிடும் பிரயோகங்கள், பிரசுரங்கள் அறிவார்ந்த எமது பணியின் அடையாளங்களாக இருக்க முடியாது, இடம் பொருள் ஏவல் குறித்த சமயோசித சாமர்த்திய நகர்வுகள், அறிவார்ந்த விழிப்பூட்டல்கள், அழகிய கருத்துப் பரிமாறல்கள் எந்தவொரு இலட்சியப் பணியினதும் அடிப்படை அம்சங்களாகும்.

தேசத்திலும், சமூகத்திலும் கோலோட்சுகின்ற பிழையான வங்குரோத்து அரசியல் கலாச்சாரத்திற்குள் அகப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் எமது சகோதர இனத்தினர், எமது சகோதர சமூகத்தினர், விசுவாசக் கோட்பாடுகளில் எமது சகோதரர்கள், உறவினர்கள்,நண்பர்கள் என்ற பரந்துபட்ட சிந்தனை எம்மிடம் இருத்தல் அவசியமாகும். அவர்களுடன் பகைமை பாராட்டுகின்ற வைராக்கிய, வஞ்சம் தீர்க்கும், பழி வாங்கும் அரசியலை எம்மால் ஒரு போதும் செய்ய முடியாது.

தெளிவான தேசிய சமூக பார்வையும்,கூட்டுப் பொறுப்பும், மூலோபாய திட்டமிடல்களும் இல்லாமல் பயணிக்கும் ஒரு சமூகம் அடுத்தடுத்த சமூகங்களை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை, அரசியலும் இராஜ தந்திரமும் முஸ்லிம் சமூகம் பறிகொடுத்து பரிதவிக்கும் ஆயுதங்களாகும்.

இன்றைய அரசியல் ஒரு மாயாஜால சூனியக் கலை..!

மக்களை ஏமாற்றி அரசியல் சூதாட்டம் நடத்தும் கும்பல் தமது மனச் சாட்சிகளுடன் எத்தகைய குரீரமான யுத்தத்தில் இருப்பார்கள் என எண்ணிப் பார்க்கவே மயிர் கூச்செறிகின்றது.

தங்களைத் தாங்களே ஒவ்வொரு முறையும் ஏமாற்றிக் கொண்டு ஊரையும் உலகையும் ஏமாற்றி வளம் வருவதென்பது சாமான்ய மயாஜாலக் கலையாக இருக்க முடியாது.

காலாவதியான வெற்றுக் கோஷங்கள் , காட்டு தர்பார்கள், அண்டிப் பிழைக்கும் அடிவருடிகள், அந்தி சந்திகளில் அடியாட்கள் தடியெடுத்த வேடர்கள், கூத்தாடிகள், கோமாளிகள், காண்ட்ராக்ட் கேட்டு நிற்கும் குபேரர்கள் அரங்கு அதிரும் ஆக்ரோஷங்கள்.

HOPE-தூரு சீனாய் மலை அடிவாரத்தில் ஒரு ஒலிக்கீற்று போல் சில நம்பிக்கை தரும் நகர்வுகள், மூஸாவின் அஸாவுடன் கிளர்ந்தெழும் இளசுகள், சூனியக் காரர்களின் அரவங்கள் மாயமாய் மறைந்துவிடும் என்ற நம்பிக்கையில் சமுதாயம்.

சமுதாயம்: அரசியல் என்றால் தலைமைகள் மட்டுமல்ல, நாயகர்களை தாங்கி நிற்கும் ஜனங்களும் தான், அதனால் தான் அது ஜன-நாயகமானது, வங்குரோத்து அரசியலின் பின்னால் மக்களில் ஒரு சாராரும் இருக்கத்தான் செய்கின்றார்கள், மாற்றம் மக்களிடமும் வரவேண்டும், மக்களை வழி நடாத்துவோரே தலைவர்கள், மக்கள் வழி செல்வோரல்ல.

ஒற்றுமை : அது ஊசி துளையில் ஓட்டகை நுழைவது போலாயிற்று, வேற்றுமையில் ஒற்றுமை என மூஸாவின் கவ்மகள் போல் நாங்களும் பன்னிரண்டு அணியினராய் ஒரே திசையில் பயணிப்பதை தவிர மார்க்கம் வேறு இல்லை.

நம்பிக்கை; அது நம்ரூத் மூட்டிய தீ மலையில் ஹுத் ஹுத் பறவை கொண்டு வந்து கொட்டிய நீர்த் துளிகள் போன்றாகி விட்டது.

ஷைத்தானின் சாம்ராஜ்யத்தில் சத்தியத்தின் கரவான் என்றோ புறப்பட்டுவிட்டது, வரலாற்றுச் சமரில் சங்கிலித் தொடராய் சத்தியத்தின் காவலர்கள் விடியல் நட்சத்திரங்களாய் கிளர்ந்து வருவார்கள்.

அன்று எதிரி எதிரியாகவே இருந்தான், இன்று எதிரி நண்பனாக வீட்டுக்கு உள்ளேயும் இருக்கின்றான், இது தஜ்ஜால்களின் யுகம்.

கூட்டிக் கழித்து கணக்கு வழக்கு பார்த்து உடனடி விளைவுகள் தேடி மாத்திரமே களமிறங்க தெரிவுச் சுதந்திரம் இங்கு இல்லை, பாதை தெளிவானது, பயணம் முடிவானது, கடமையை நாம் செய்வோம் விளைவுகளை அவனிடமே விட்டுவிடுவோம்.

சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் இடையில் தான் சமர் என்றால் அணி இரண்டு மட்டுமே, ஒரு தரப்பில் நாம் இருந்து தானேயாக வேண்டும்.

ஆதமும் ஹவ்வாவும் உலகிற்க்கு அனுப்பப் பட்டது முதல் எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் இடையிலான சமர் இறை நேசர்களிற்கும், ஷைத்தானின் பட்டாளங்களிற்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஆதமுடைய மக்கள் பிறக்கின்ற எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும் அவர்களுக்கான களமும், தளமும் காத்திருக்கின்றன, ஒவ்வொரு ஆன்மாவும் தாம் பிறந்த இடத்தில், காலத்தில் சத்தியத்தின் காரவானில் இணைந்து கொள்ள வேண்டும்.

சொந்த மண்ணில் போராட்டங்கள் மறந்து வேறெந்த மண்ணின் போராட்டம் குறித்தும் பேசுவதும் எழுதுவதும் அடித்தளமின்றி ஆகாயத்தில் கோட்டை கட்டுவது போலாகும்.

சொந்த மண்ணில் நமது இலட்சியப் பணி துவங்குகின்றது..

“ஒவ்வொரு மனிதனும் அல்லாஹ்வின் கலீபா ஆவான், அவனது கிலாபத்திற்குரிய பணி அவன் படைக்கப்பட்ட இடத்திலும் காலத்திலும் ஆரம்பமாகின்றது…”

பலஸ்தீனை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு பைத்துல் மக்திஸில் கால்பதிக்க விரும்புகின்றீர்களா..?

சிரியாவில், இராக்கில், யமனில் யுத்தம் ஓய நீங்கள் போராடவிரும்புகின்றீர்களா..?

PORஎகிப்தில் அராஜக ஆட்சி ஒழிந்து சட்டபூர்வமான ஆட்சி நிலைபெற வேண்டுமென கரிசனை கொண்டுள்ளீர்களா..?

லிபியாவில் இஸ்லாமிய ஆட்சி ஏற்படவேண்டுமா..?

மத்திய கிழக்கு நாடுகளில் நாம்விரும்பும் மாற்றங்கள் ஏற்படவேண்டுமா..?

கஷ்மீர்ருக்கு விடிவும் விடுதலையும் வேண்டுமா?

சோமாலியாவில் போரோய்ந்து வறுமையும் ஒழிய வேண்டுமா..?

ஐரோப்பாவில் துருக்கி ஸ்திரமடைய வேண்டுமா, முஸ்லிம் உலக எழுச்சியில் அது பிரதான வகிபாகத்தை கொண்டிருக்க வேண்டுமா..?

எழுதுவோம், பேசுவோம், குரல் கொடுப்போம்…ஏனென்றால நாங்களும் முஸ்லிம் உம்மத்தின் ஒரு பகுதியினர்…

ஆனால்…

பொங்கி யெழும் உணர்வலைகளுக்கு வடிகான் அமைத்து நாங்களும் பங்காளிகளாக ஒரு நகர்வை மேற்கொள்ள வேண்டுமா…?

வாருங்கள்…, சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான சமர் உலகெங்கும் இறுதிநாள் வரை இடம்பெறும்…

good-leadersசத்தியத்தின் கரவானில் எங்கோ ஏதோ ஒரு இடத்தில் என்றோ நாம் இடப்பிடித்துக் கொள்ளத்தானே வேண்டும்…

சொந்த மண்ணில் நாம் ஒரு சமூகத்தவர், தேசத்தவர் என்ற வகையில் நாங்கள் எதிர்கொள்ளும் எமது இருப்பு, பாதுகாப்பு, அடிப்படைஉரிமைகள் சார்ந்த சமூக, அரசியல், பொருளாதார சவால்களிற்கு களத்தில் முகம் கொடுப்போம்..!

சொந்த வாழ்வில், சொந்த வீட்டில், சொந்த ஊரில், சொந்த மஹல்லாவில் சொந்தமண்ணில், சொந்த அமைப்பில், சொந்த கட்சியில், மாற்றத்தின் முகவர்களாக ஒரு எட்டை முன்வைத்து எங்கள் தேசத்தில் நாம்கடந்து வந்த பாதைகளை மீள்பார்வை செய்து சர்வதேப் பார்வையின் ஒளியில் நகர்விற்கான பாதையை வகுத்துக் கொள்வோம்..!

“ஒவ்வொரு மனிதனும் அல்லாஹ்வின் கலீபா ஆவான், அவனது கிலாபத்திற்குரிய பணி அவன் படைக்கப்பட்ட இடத்திலும் காலத்திலும் ஆரம்பமாகின்றது…”

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles