Tuesday, October 19, 2021

பெண்களுடைய ஆடை விவகாரத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா 2009 ஆம் ஆண்டு எடுத்த நிலைப்பாடே சரியானதாகும்.

O நிகாப் கிமார் ஆடைகளுக்கு தடை வரின் ஒன்றிணைந்து எதிர்ப்போம்.

acjuபெண்களுடைய ஆடை விவகாரத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா நிகாப் விவகாரத்தில் குறிப்பிட்ட ஒரு மத்ஹப் அல்லது அமைப்பின் நிலைப்பாட்டை பொதுமைப் படுத்தி தீர்மானம் (2007) எடுத்தமை ஒரு வரலாற்று/ இஜ்திஹாத் தவறாகும், தமது ஒரு தலைப் பட்சமான நிலைப்பாட்டினை மீள்பரிசீலனை செய்து  மாற்றுக் கருத்தையும் மதிக்க வேண்டும் என ஜம்மியத்துல் உலமா (2009) இல்   எடுத்த முடிவே சரியான நிலைப்பாடாகும்.

ஷாபியி மத்ஹபின் இமாம் ஷாபிஈ தனது “கிதாபுல் உம்” கிரந்தத்தில் தெளிவாகவும் அவர்களது மாணவர்களில் “ஜும்ஹூர்” பெரும்பாலானோர் தமது விளக்கவுரைகளிலும் குறிப்பிட்டுள்ள பிரபலமான கருத்தை தொன்று தொட்டு இலங்கையின் மூத்த உலமாக்கள் 2007 ஆண்டு வரையிலும் அனுமதித்தும்  பின்பற்றியும் வந்துள்ளார்கள், உலகிலும் கணிசமான பகுதியினர் பின்பற்றுகின்றார்கள்.

வரலாறு நெடுகிலும் உலமாக்கள்மத்ஹபுகளுடைய இமாம்கள்புகஹாக்கள் விரிவாக ஆராய்ந்துள்ளார்கள்பத்வாக்களும் வழங்கப்பட்டுள்ளன, மென்மேலும் நாம் இவ்விடயத்தில் வாதப் பிரதி வாதங்களுக்குள் செல்வது அவசியமில்லை.

இந்த விடயத்தில் நான் உடன்படா விட்டாலும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுடனும் அதில் அங்கத்துவம் பெற்றுள்ள குறிப்பிட்ட மத்ஹப் மற்றும் அமைப்பு சார்ந்தவர்களுடன் வாதப் பிரதி வாதங்களில் ஈடுபட விரும்பவில்லை, மாற்றுக் கருத்து உடையோரை நெறி பிரழ்ந்தவர்கள் என மட்டராகமாக விமர்சிப்பதை உடனடியாக நிறுத்துமாறு ஜம்மியத்துல் உலமா உலமாக்களை அறிவுறுத்த வேண்டும், அதேபோல் ஏனைய அமைப்புக்களும் தமது அங்கத்தவர்களை அறிவுறுத்த வேண்டும்.

இன்னும் ஒரு மஜ்லிஸுல் பிக்ஹ் தோன்றுவதற்கு எந்தவொரு தரப்பும் காரணமாக இருந்துவிடக் கூடாது.

முகம் கரங்கள் உற்பட  உடல் முழுவதும் திரையிடுவது கட்டாயம் எனக் கருதும் நிலைப்பாட்டை கொண்டுள்ளோர் அதனை பின்பற்றுவது அவர்களது சுதந்திரமும் தெரிவுமாகும். அதே போன்று அடுத்த நிலைப்பாட்டில் இருப்பவர்களை ஹராத்தை செய்பவர்களாகவும் வழிகேடர்களாகவும் காபிர்களாகவும் அழைப்பது அறியாமையாகும்.

நிகாப் கிமார் ஆடைகளுக்கு தடை வரின் ஒன்றிணைந்து எதிர்ப்போம்.

தேசிய அரங்கிலும் சர்வதேச அரங்கிலும் நிகாப்பிற்கு எதிராக குரல் கொடுக்கும் மூன்றாம் தரப்பினரின் உள்நோக்கங்களை நாம் அறியாமலும் இல்லை, இங்குதான் கருத்து வேற்றுமைகளுக்கு மத்தியிலும் எமது சமூக ஒற்றுமை கட்டி எழுப்பப் பட வேண்டிய அவசியம் உணரப்படுகின்றது.

நிகாப் அணிவதற்கு விரும்பும், கடமை எனக் கருதும் ஒரு சாராரின் உரிமை மதிக்கப் படுவதோடு அதற்கு தடை கொண்டு வரப்படுவதற்கு நாம் எந்த வகையிலும் இடமளிக்கவும் முடியாது.

முஸ்லிம்களது சமய கலாசார பண்பாட்டு பாரம்பரியங்களை பேணுவதும் பாதுகாப்பதும் கடைப்பிடிப்பதும் அவர்களது அடிப்படை உரிமையாகும், அவற்றிற்கெதிராக தீய சக்திகள் மேற்கொள்கின்ற பரப்புரைகளை முறியடிப்பதில் முஸ்லிம்களாகிய நாம் இதுவரைகாலமும் ஒன்றிணைந்தே செயற்பட்டு வருகின்றோம், கருத்து வேற்றுமைகளுக்கு மத்தியிலும் நாம் நாம் ஒற்றுமையை கடைப்பிடித்துள்ளோம்.

அதேபோன்றே மாதர்களின் ஆடை விவகாரத்தில் நாம் குறிப்பிட்ட ஒரு நிலைப்பாட்டை  ஆதரித்தும் எதிர்த்தும் உள்வீட்டில் மேற்கொள்கின்ற கருத்து மோதல்கள் மேற்படி மூன்றாம் தரப்பினருக்கு சாதகமாக அமைந்துவிடக் கூடாது, நிகாப் கிமார் அணிய விரும்புபவர்களின் உரிமையில் சுதந்திரத்தில் சமூகத்தில் உள்ள தனிப்பட்டவர்களோ அமைப்புக்களோ அனாவசிய தலையீடுகளை மேற்கொள்ளவோ எல்லை மீறிய விமர்சனங்களை மேற்கொள்ளவோ கூடாது.

முரண்பாடுகளை தவிர்ப்பதற்கும் வரலாற்றில் மிக நெருக்கடியான ஒரு கால கட்டத்தில் உம்மத்தின் ஒற்றுமையை கட்டி எழுப்புவதற்கும் எல்லா தரப்பினரும் புரிந்துணர்வுடன் ஒத்துழைக்க முவருதல் காலத்தின் கட்டாயமாகும்.

முஸ்லிம் மாதரது ஆடை : கருத்து வேறுபாடுகள்

முஸ்லிம் மாதர்சா தாரணமாக வெளியில்தெரியக் கூடிய பகுதிகள் (முகம்,கரங்கள்) தவிர்ந்த ஏனைய பகுதிகளை மறைத்து, அங்க அவயவங்களின் அலங்காரங்கள் கவர்சிகள் புலப்படாத வண்ணம் தளர்வான ஆடைகளை அணிதல் வேண்டும்.

“இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும் ….”(ஸுரத்துன் நூர் 24:31)

மேற்படி திருமறை வசனத்திற்கு வரலாறு நெடுகிலும் உலமாக்கள், மத்ஹபுகளுடைய இமாம்கள், புகஹாக்கள் விரிவாக ஆராய்ந்துள்ளார்கள், இரண்டு வகையான நிலைப்பாடுகளையும் தெளிவாகவே  முன்வைத்துள்ளார்கள், பத்வாக்களும் வழங்கப்பட்டுள்ளன, மென்மேலும் நாம் இவ்விடயத்தில் வாதப் பிரதி வாதங்களுக்குள் செல்வது அவசியமில்லை.

ஷாபியி மத்ஹபின் இமாம் ஷாபிஈ தனது “கிதாபுல் உம்” கிரந்தத்தில் தெளிவாகவும் அவர்களது மாணவர்களில் “ஜும்ஹூர்” பெரும்பாலானோர் தமது விளக்கவுரைகளிலும் குறிப்பிட்டுள்ள பிரபலமான கருத்தை தொன்று தொட்டு இலங்கையின் மூத்த உலமாக்கள் 2007 ஆண்டு வரையிலும் அனுமதித்தும்  பின்பற்றியும் வந்துள்ளார்கள், உலகிலும் கணிசமான பகுதியினர் பின்பற்றுகின்றார்கள்.

ஹனபி, மாலிகி மத்ஹபுகளிலும் சலபுஸ் ஸாலிஹ் உலமாக்களினதும் பிரபலமான கருத்து மேற்படி நிலைபாட்டை சார்ந்ததாகவே இருக்கின்ற அதேவேளை பெண்களின் உடல் முழுவதும் அவ்ரத் எனும் நிலைப்பாட்டையும் எல்லா மத்ஹபுகளையுயம் சார்ந்த பல புகஹாக்களும் வலியுறுத்தியுள்ளார்கள் என்பதனையும் எவரும் மறுதலிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஜமாத்தே இஸ்லாமி, தப்லீக் ஜமாஅத் ஆகியவற்றின் செல்வாக்கு மிகுந்த   இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் ஹனபி மத்ஹப் நிலைப்பாட்டையும், வளைகுடா அறபு நாடுகளில் ஹன்பலி, மாலிகி மத்ஹப் நிலைப்பாடுகளையும், அறபு நாடுகளில் ஆண்கள் வெள்ளை பெண்கள் கருப்பு ஆடை அணியும் நவீன கலாசார முறைகளை மக்கள் பின்பற்றுகின்றார்கள்,ஆபிரிக்க நாடுகளில் லாஹிரி மாலிகி ஷாபிஈ என பல நிலைப்பாடுகளிலும் மக்கள் ஆடைகளை அணிகின்றார்கள்.

ஆடைகளின் நிறம் 

கருப்புநிற ஆடைகளை தான் பெண்கள் கட்டாயம் அணிய வேண்டும் என்பதில்லை, வாழுகின்ற நாட்டின் சீதோஷன நிலைகளை கருத்தில் கொண்டு அதிக கவர்ச்சியற்ற தளர்வான ஆடைகளை அவர்கள் தாராளமாக அணியலாம்.

மாதர்கள் முகம்மூடி அணிந்தாலும், முகம்திறந்து அணிந்தாலும் அங்க அவயவங்களை புலப்படுத்துகின்ற கவர்ச்சியான இறுக்கமான ஆடைகளை அணிவதும் அவற்றை சந்தைப் படுத்துவதும் தவறாகும்.

மஹ்ரம் துணை

அத்தோடு எத்தகைய ஆடைகளை அணிந்தாலும் மஹரம் துணையின்றி பொது இடங்களிலும், பொது போக்கு வரத்துகளிலும் தனித்து அலைந்து திரிவதை கண்டிப்பாக முஸ்லிம் மாதர் தவிர்ந்து கொள்ளல்வேண்டும், பொது இடங்களில் இஸ்லாமிய ஆடைகளை அடுத்தவர்கள் தரக்குறைவாக கருதும் வண்ணம் நடந்து கொள்வதும் தவிர்க்கப் படவேண்டிய விடயங்களாகும்.

பாதுகாப்பு காரணங்கள்

பாதுகாப்பு காரணங்களிற்காக பரிசோதனைகள் இடம் பெறின் பெண் அதிகாரிகளின் துணையுடன் நாம் பாதுகாப்பு தரப்பினருக்கு நிபந்தநிகளுடன்கூடிய ஒத்துழைப்பை வழங்கலாம், அதேபோன்றே ஆள் அடையாள அட்டைகளிற்கான புகைப்படத்தை எடுத்துக் கொள்வதற்காக தமது முகத்திரையை ஓரளவு நகர்த்துவதில் மார்க்கத்தில் எந்த தடையும் இல்லை.

ஆண்களின் மீதுள்ள பொறுப்புக்கள்

மாதர்களின் ஆடைகளில் கரிசனை செலுத்தும் ஒரு சமூகம் மாதர்களுக்கு எதிரான சமூக பொருளாதார கலாச்சார அநீதிகளையும் களைவதற்கு மாநாடுகளை நடத்த வேண்டும், நோய்களிற்குரிய அடிப்படை காரணிகளை கண்டு அவற்றிற்கு நாம் வைத்தியம் செய்ய தவறி விடுகின்றோம்.

உதாரணமாக இஸ்லாமிய ஆடையணிந்து மஹ்ரம் துணையுடன் மாதர் வீட்டைவிட்டு வெளியேறுவதை வலியுறுத்தும் ஒரு சமூகம் தமக்கொரு துணையை விலை கொடுத்து வாங்குவதற்கென வீட்டைவிட்டு வெளியேறி உழைக்கும் நிலையை கடல்கடந்து பயணிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ள சமூக கொடுமைகள் அநீதிகளை கண்டு கொள்ளாமல் இருக்கின்றமை தான் ஆச்சர்யமானது.

பெண்கள் குறித்த சட்டங்களை விதிக்கும் இஸ்லாம் ஹிஜாப், மஹ்ரம் பற்றி பேசுவதோடு நின்றுவிடவில்லை மாறாக இஸ்லாத்தின் நிழலில் பெண்களின்  அந்தஸ்து  ஆண்கள்  மீதான கடமைகள் பொறுப்புக்கள், பெண்களுடைய உரிமைகள் பற்றியெல்லாம் பரந்த முழுமையான ஒரு பரப்பில் பேசியிருக்கின்றது.

“(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். …(ஸுரத்துன்நிஸா  4:34)

இஸ்லாத்தை பகுதி பகுதியாக பின்பற்றாது முழுமையான வாழ்வு நெறியாக நாம் எடுத்துக் கொள்கின்ற பொழுது ஏகப்பட்ட பிரச்சினைகளிற்கு தீர்வுகள் கிடைக்கின்றன.

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles