Monday, April 20, 2026

விரைவில் மைத்ரி மஹிந்த கூட்டணி அமையுமா..?

O முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசியல் நகர்வுகள்

நல்லாட்சி அரசு அமையுமட்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பலம் வாய்ந்த தலைவராக இருந்த முன்னாள் ஜனாதிபதி அவர்களிடமிருந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜானாதிபதி மைத்ரி சுதந்திரக் கட்சியின் தலைமையை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் வழிகாட்டலில் கையகப் படுத்திக் கொண்டார்.

cbk-my3-ranilஅதற்கு நல்லாட்சி அரசு பாரிய விலையைக் கொடுக்க நேரிட்டது 19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்த சட்ட மூலத்தை பாராளுமன்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சட்டமாக்கிக் கொளவதற்கு  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விசேடமாக மஹிந்த அணியில் இருந்த பிரதான சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சு பிரதியமைச்சு பதவிகளை மற்றும் சலுகைகளை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

என்றாலும், 2015 பொதுத் தேர்தல் இடம் பெற்ற பொழுது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினதும் சுதந்திரக் கட்சியினரது அழுத்தத்தின் பெயரில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை குருனாகலையில் போட்டியிட அனுமதிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படுமளவிற்கு மஹிந்த அணியினரது அரசியல் நகர்வுகள் வலுப்பெற்றிருந்தன, அவ்வாறு போட்டியிட்டமை சாதாரண ஒரு பாராளு மன்ற உறுப்பினராக இருப்பதற்கு அல்ல என்பதனை ஊகிக்க முடியுமாக இருந்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், பாதுகாப்புச் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக பலமான குற்றச் சாட்டுக்கள் இருந்த பொழுதும் மக்கள் எதிர்பார்த்த வீச்சில் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் இடம் பெறாமைக்குப் பின்னால் (பொலிஸ் நிதி மோசடிப் பிரிவை தனக்கு கீழ் வைத்திருந்த பிரதமர் ரணில் அவர்களின்) அரசியல் நிகழ்ச்சி நிரல் இருந்ததனை உணர முடிந்தது.

இலங்கையில் மூன்றாவது பெரும் அரசியல் அணியாக இன்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையிலான கூட்டு எதிரணி பரிணாமம் அடைந்துள்ளது, சுதந்திரக் கட்சியை ஒன்றிணைய விடாது கூறுபோடுகின்ற அரசியல் நகர்வுகளை பிரதமர் ரணில் விகிரமசின்ஹா மேற்கொள்வதாகவும் அதற்கேற்றவகையில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரை பாதுகாப்பதாகவும் அவர்களை வளர்த்துவிட்டதாகவும் ஊகங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் நகர்வுகளைப் புரிந்து கொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியை பலப்படுத்துகின்ற நகர்வுகள் குறித்து கூடுதல் கரிசனை செழுத்துவதனையும் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அணியினரின் அரசியல் செல்வாக்கையும் மக்கள் ஆதரவுத் தளத்தையும் சாதகமாக பரிசீலிக்கின்ற சமிக்ஞைகளை வெளியிட்டு வருவதாகவே தெரிகின்றது.

நல்லாட்சி அரசின் நிகழ்ச்சி நிரல் எப்படிப் போனாலும் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் எதிர்கால தேர்தல்களை கருத்திற்கொண்டு தத்தமது அணிகளை பலப்படுத்திக் கொள்கின்ற கைங்கரியங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் மேற்கொள்வதனை அவதானிக்க முடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் நகர்வுகள் மற்றும் பொது எதிரணியினரின் அரசியல் நகர்வுகள் ஜனாதிபதி மைத்திரி அவர்களை தனிமைப் படுத்தி விடுவதனை நிச்சயமாக அவர் ஒரு பொழுதும் கண்டும் காணாது இருக்கப் போவதில்லை.

அரசியல் கள நிலவரங்களை தமக்குச் சாதகமாக பயன்படுத்தும் மஹிந்த அணியினர்

mrமேற்படி அரசியல் கள நிலவரங்களை தமக்குச் சாதகமாக பயன்படுத்தும் மஹிந்த அணியினர் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகிய இருவரையும்  உச்ச கட்ட இராஜ தந்திரத்துடன் கையாண்டு வருவதோடு நல்லாட்சி அரசு குறித்த நம்பிகையீனங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் வெற்றிகண்டு வருகின்றனர்.

உதாரணமாக பாரிய கடன் சுமையினால் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் நல்லாட்சி அரசு பாரிய அபிவிருத்தி திட்டங்கள எதனையும் முன்னெடுக்காது இருப்பதனை தமக்குச் சாதகமாக பிரச்சாரம் செய்யும் மஹிந்த தரப்பினர் தாம் பெருந்தெருக்களை துறைமுகங்களை அமைத்ததாகவும், திவிநெகும, மகநெகும திட்டங்களை நாடளாவிய ரீதியில் மேற்கொண்டதாகவும் நல்லாட்சி அரசு எதனையும் செய்யவில்லை என்றும் பொதுசன அபிப்பிராயத்தை தோற்றுவித்து வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க முணையும் அரசு சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களிற்கு ஏற்ப பொருட்கள் சேவைகள் மீதான வரியினை அதிகரிப்புச் செய்வதனையும், அரச நிறுவனங்களை தனியார் மயமாக்க அரசு எடுக்கும் கொள்கை தீர்மானங்களையும் தமக்கு சாதகமான பிரச்சார கருப்பொருளாக மஹிந்த தரப்பு பயன்படுத்துகின்றது.

அதேபோல், சர்வதேச சமூகத்துடனான உறவுகளை சீர்செய்யும் அரசின் நடவடிக்கைகளை சர்வதேச சமூகத்திடம் இலங்கை சரணடைந்துள்ளதாகவும், ஐ நா மனித உரிமை ஆணைக்குழுவின் அழுத்தங்களிற்கு பணிந்து தேசத்தையும் இராணுவத்தினரையும் காட்டிக் கொடுக்கப் போவதாகவும் தீவிரமான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசியல் அதிகாரப் பகிர்வின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முனையும் அரசின் முன்னெடுப்புக்களை சர்வதேச அழுத்தங்களிற்குப் பணிந்து நாட்டை பிளவுபடுத்தப் போவதாக தென்னிலங்கை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

muslim-mahinda-meet-jpg035அண்மைக்காலமாக சிறுபான்மை சமூகங்களின் மனங்களை வெல்லுகின்ற நடவடிக்கைகளையும் மஹிந்த தரப்பு மேற்கொள்வதாக தெரிகின்றது , குறிப்பாக முஸ்லிம் மக்களுடனான சந்திப்புக்களை அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள், கடந்த கால கசப்பான நிகழ்வுகளிற்கு மனம் வருந்துவதாகவும் எதிர்காலத்தில் ஆவை இடம் பெறாதிருக்க உத்தரவாதங்கள் வழங்குவதாகவும் தெரிவிக்கப் பட்டு வருவதோடு அவ்வாறான சம்பவங்களிற்கு பின்னால் இருந்தவர்கள் நல்லாட்சி அரசில் தற்பொழுது முக்கிய பதவிகளில் இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

அண்மையில் வடக்கு முதலவர் சி.விக்னேஷ்வரன் தலைமையில் இடம் பெற்ற “எழுக தமிழ்” போராட்டம் குறித்து கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்த சி.விக்னேஸ்வரனை இனவாதியாக பார்க்க வேண்டாம் எனவும் அவர் தனது அரசியலை திறம்படச் செய்கின்றார் என்றும் கருத்துத் தெரிவித்திருந்தார், சி.விக்னேஸ்வரன் அவர்களது நடவடிக்கைகள் தென்னிலங்கை பேரினவாத சக்திகளுக்கு சாதகமாகவே அமையும் என்ற கருத்தினை ஏனைய தமிழ்த் தலைமைகள் விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

முஸ்லிம் அரசியல் குழுக்களின் நிலைப்பாடுகள்

basheerஎதிர்காலத் தேர்தல்களில் முஸ்லிம் அரசியல் குழுக்கள் எவ்வாறான நிலைப்பாடுகளை எடுக்கப் போகின்றார்கள் என்பது கேள்விக்குறியாகவே வழமைபோல் இருக்கின்றது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் மாத்திரமன்றி மாகாண சபை பாராளுமன்றத் தேர்தல்களிலும் புதிய கலப்புத் தேர்தல் முறை அறிமுகப் படுத்தப் படும் பட்சத்தில் சிறிய கட்சிகளிற்கும் சிறுபான்மை கட்சிகளிற்கும் பாதிப்புக்கள் ஏற்படலாம், அவை பிரதான தேசியக் கட்சிகளுடன் உடன்பாடுகளை எய்த வேண்டிய கட்டாய நிலையம் ஏற்படும் சாத்தியப் பாடுகள் இருக்கின்றன.

இவ்வாறான ஒரு நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் ஒரு பிரதான கூட்டணி அமைகின்ற அதேவேளை சுதந்திரக் கட்சி தலைமையிலும் ஒரு கூட்டணி அமையும் என எதிர்பார்க்கலாம். அவ்வாறு அமைந்தால் சுதந்திரக் கட்சி அணியில் மஹிந்த தலைமையிலான எதிர்க் கட்சிக் கூட்டணி பலமான சகதியாக திகழும் சாத்தியப் பாடுகளே அதிகரித்துக் காணப் படுகின்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை வழமைபோல் (சேதாரமில்லா விட்டுக் கொடுப்பு) ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தே தேர்தல் களங்களில் குதிக்கும் என நம்பலாம், அதற்கான ஒரு புரிந்துனர்வுடனேயே தலைவர் அஷ்ரஃப்  அவர்களது மரணத்தின் பின்னர் இன்றுவரை முஸ்லிம்காங்கிராஸ் தலைமை தீர்மானங்களை எடுத்து தேர்தல் புரிந்துணர்வு உடன்பாடுகளை செய்து வந்திருக்கின்றமை வரலாறாகும்.

rishadஅமையவிருக்கும் சுதந்திரக் கட்சிக் கூட்டணியில் கிழக்கிலங்கையை பொறுத்தவரை அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அமைச்சர் அதாவுல்லாஹ் போன்றவர்களும் அமையவிருக்கும் புதிய முஸ்லிம் முன்னணியும் இணைந்து தேர்தல் களத்தில் குதிக்கும் சாத்தியப் பாடுகள் தென்படுகின்றன.

அமைச்சர் ரிஷாத் தலைமையிலான மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கேட்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தரப்பிலிருந்து பலத்த ஆட்சேபங்கள் வரின் அவரும் கிழக்கிலங்கை ஏனைய தலைமைகளோடு சுதந்திரக் கட்சி கூட்டணயில் இணைந்து செயற்பட வேண்டிய நிலை வரலாம்.

முஸ்லிம் அரசியலைப் பொறுத்தவரை சுதந்திர கிழக்கு, கிழக்கின் எழுச்சி அணிகள் மாத்திரமன்றி வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாக தொடர்ந்தும் இருக்க வேண்டும் எனக் கருதும் அணிகள் மைத்ரி மஹிந்த தலைமையிலான சுதந்திரக் கட்சி கூட்டணியில் இணைந்து கொள்ளும் என கருத முடியும்.

வடகிழக்கு இணைப்பு பிரிப்பு விவகாரம், புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்கள், தேர்தல் முறை மாற்றங்கள், எல்லை மீள் நிர்ணயங்கள், முஸ்லிம் தனியார் சட்டங்கள், சமாதான சகவாழ்வு, உற்பட இனமத வெறி சக்திகளின் நகர்வுகள் என பல்வேறு காரணிகள் முஸ்லிம் அரசியலில் மிகவும் கவனமாக பரிசீலிக்கப் படவேண்டிய அம்சங்களாகும்.

அதேவேளை ஒரு சிலரது கிடப்பிலுள்ள கோவைகளும் கோப்புக்களும் அணிசேருகின்ற விடயத்தில் வழமைபோல் தாக்கம் செலுத்தவும் இடமிருக்கிறது.

தேசிய அரசியல் களநிலவரங்களை மிகவும் பொறுப்புணர்வுடனும் நிதானமாகவும் அணுகி நல்லாட்சி எண்ணக்கருக்களை மையப்படுத்தி எமது எதிர்கால அரசியல் நகர்வுகளை நாம் மேற்கொள்ள வேண்டும், அதற்கான உள்ளக கருத்தாடல்களை இப்பொழுதிருந்தே நாம் ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காகவே மேற்படி அனுமானங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles