பிரபஞ்சம், அதில் எங்கோ இருக்கும் பால்வெளி மண்டலம், அதிலும் அடையாளம் காண முடியாத நமது சூரிய குடும்பம், நமது சிறிய கோள் புவி, தன்னைத் தானே ஒரு முறை சுற்றி, சூரியனை கோளப்பாதையில் சுற்றிவருதல், அதன்மூலம் இரவு பகல் மாறி வருதல், நாட்கள், வாரங்கள்,மாதங்கள்,வருடங்கள் என காலத்தின்த்தின் கணிப்பீடு, ஓசோன் மண்டலம், வளி மண்டலம், சூரியனின் கதிர்வீச்சு, ஆறு கடல், மழை நீர் , நீர் , நெருப்பு ,காற்று, கடலிலும் தரையிலும் உள்ள அனைத்து படைப்பினங்கள், தாவரங்கள், உயிரினங்கள், நுண்ணுயிர்கள்…ஒன்றோடு ஒன்று தொடர்புபட்ட வாழ்வுச் சக்கரம்..
இவற்றை எல்லாம் மண்ணில் வாழ்வதற்காக, மண்ணினால் படைக்கப்பட்ட மனிதனுக்காக படைத்து, வயப்படுத்தி அவனுக்கு அவற்றைக் கையாளும் அறிவு ஞானத்தையும் வழங்கிய பின் அத்தனை பிரபஞ்ச நியதிகளையும் திட்டமிட்டு தீர்மானித்து வகுத்து இயங்கச் செய்து கொண்டிருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் காலத்திற்குக் காலம் இறை தூதர்களை அனுப்பி மனித குலத்திற்கான வாழ்வு நெறி எனும் அமானிதத்தை வழங்கி இருக்கின்றான்.
தனது உடல் அறிவு ஆன்மா இந்த மூன்றையும் இறைவன் வகுத்த வழியில் தனி மனிதனாக, குடும்பமாக, சமூகமாக, தேசமாக, உம்மத்தாக, உலகமாக வாழ்வதன் மூலம் இவ்வுலக மற்றும் மறு உலக வாழ்வில் வெற்றி பெற வேண்டிய மனிதன் இன்று அளவின் விளிம்பில் அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றான்.
தனிமனிதாக,குடும்பமாக,சமூகமாக,தேசமாக,உம்மத்தாக,சர்வதேசமாக மனிதன் வாழ்வதற்கே காலத்திற்குக் காலம் நபிமார்களும், தூதுவர்களும், இறை தூதுகளுடன் அருளப்பட்டனர்.
ஆன்மீக பயிற்சிகள் ஆயினும்,அகீதத் ஆயினும் ஷரீஅத் ஆயினும் கிலாபாத் ஆயினும் அவை குறித்த பிக்ஹு அல்லது இஜ்திஹாது எல்லாமே மறுமைக்கான விளைநிலமான இன்மை வாழ்வில் மனிதனின் உயிரிலும் மேலான தீன்,உயிர்,அறிவு,உடைமைகள்,பரம்பரை என்ற அடிப்படை அம்சங்களை மையப் படுத்தியதாகவே அமைந்திருக்கின்றன.
காலத்திற்குக் காலம் நபிமார்கள்,தூதுவர்கள், இறுதி இறைதூதர் முஹம்மத் (ஸல்)அவர்கள் சஹாபாக்கள், தாபிஈன்கள் அவர்கள் பின் வந்த நல்லடியார்கள் மனித வர்க்கத்திற்கு தத்தமது பங்களிப்பை செய்திருக்கின்றார்கள்.
இறைவன்,பிரபஞ்சம்,உலகம்,வாழ்வு,மரணம்,இன்மை மறுமை குறித்த மிகவும் தெளிவான கோட்பாட்டுச் சிந்தனைகளை கொண்டுள்ள சிறந்த ஒரு உம்மத் நவீன உலகிற்கு இஸ்லாம் குறித்த எத்தகைய நடை முறை வியாக்கியானங்களை தனி மனிதர்களாகவும், குடும்பங்களாகவும், சமூகங்களாகவும், தேசங்களாகவும், உம்மத்தாகவும் முன்வைத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதே ஒவ்வொரு விசுவாசியினதும் ஆன்மாவை ஆட்டிப் படைக்கின்ற, உள்ளத்தை உறுத்துகின்ற கேள்வியாகும்.
இஸ்லாத்தின் பெயரால், ஷரீஅத்தின் பெயரால், அகீதாவின் பெயரால், கிலாபாத்தின் பெயரால், ஆன்மீகநெறிமுறைகளின் பெயரால் மொத்தத்தில் மதத்தின் பெயரால் வெவ்வேறு முரண்பாட்டு முகாம்களுக்குள் சிக்கி சின்னாபின்னப்பட்டு இன்மை மறுமை வாழ்வின் அத்துணை இலக்குகளையும் தொலைத்துக் கொண்ட ஒரு உம்மத்தாக, இஸ்லாத்தின் எதிரிகளை உள்வீட்டில் வைத்து போஷிக்கும் ஒரு உம்மத்தாக அவர்களின் நலன்களுக்கேற்பவே நகர்த்தப் படும் முகாம்களாக நாம் மாறி வருகின்றோம்.
இஸ்லாத்தையும் முஸ்லிம் இளைஞர்களையும் இலக்கு வைத்து சத்தியத்தின் கோலம் கொண்டு, சத்தியத்தின் சுலோகங்கள் சுமந்து சதி வலைகளை விரித்துள்ள பரந்து விரிந்த சியோனிஸ மற்றும் மேலைத்தேய மேலாதிக்க சக்திகளிடமிருந்தும் முஸ்லிம் உலக முகவர்களிடமிருந்து காப்பாற்றுகின்ற மிகப் பெரும் பாரதூரமான பணி நாம் கடந்த பல தசாப்தங்களாக கொண்டிருந்த செயற்பாட்டு இலக்குகளை, கோட்பாடுகளை காலாவதியாக்கியுள்ளன.
மனிதாபிமானம் எனும் பொது வெளி
இன மத நிற மொழி தேச பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் உன்னதமான மானுட விழுமியங்கள், மனிதாபிமானம் எனும் பொது வெளி குறித்து சித்தாந்த மற்றும் செயற்பாட்டு முகாம்கள் அதிகூடிய கவனம் செலுத்துதல் வேண்டும்.
ஆன்மாக்களை வெல்லுகின்ற அறப்பணியிற்கு இஸ்லாம் ஆயுதங்களால் மேற்கொள்ளப்படும் அறப்போரினை விட அதிக முக்கியத்துவமும், முன்னுரிமையும் கொடுத்துள்ளது.
அழமான ஆன்மீக நம்பிக்கைகளின் அடித்தளத்தில் உறுதியாக கட்டி எழுப்பபட்ட தனமனித ஆளுமைகள் அணுகுண்டுகளை விடவும், கனரக ஆயுதங்களை விடவும், யுத்த விமானங்களை விடவும், போர்க்கப்பல்களை விடவும் பலமானவை என்பதனாலேயே இந்த உம்மத்து அது சுமந்து நிற்கும் மனித குலத்திற்கான மகத்தான தூது இலக்கு வைக்கப்படுகின்றது.
இஸ்லாமிய பெறுமானங்கள் அறிவு பூர்வமான,விஞ்ஞான பூர்வமான இயற்கையோடு இயைந்து செல்கின்ற தர்க்க ரீதியாக நிரூபிக்க முடியமான மென்பொருட்களாக மாத்திரம் இருக்க துரதிஷ்ட வசமாக முஸ்லிம் உலகு இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் கோரமான அகோரமான வியாக்கியானங்களை உலகின் முன் வைத்துக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு விசுவாசியும் தனது சுற்றுச் சூழலில் ஆன்மீக பண்பாட்டு பக்குவங்களினாலும்,உயரிய மானுட விழுமியங்களினாலும் நேர்மறையான கதிர்வீச்சை பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நடை முறை வியாக்கியானமாக மாறுவதே இஸ்லாமிய தஃவாவின் முதலாவது படியாகும்.
உயரிய இஸ்லாமிய குணாதிசயங்களை, பண்பாடுகளை, ஒழுக்க விழுமியங்களை, தயாள குணங்களை, தாராளத் தன்மைகளை, பெரும்தன்மைகளை அழகான இஸ்லாமிய தனிநபர், குடும்ப, சமூக,அரசியல்,பொருளாதார வாழ்வு நெறிகளை செயல்வடிவில் பிரதிபலிக்கின்ற ஒவ்வொரு விசுவாசியும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உண்மை பிரதிநிதிகள் கலீபாக்கள் ஆவர்.
இன்ஷாஅல்லாஹ்,
அறபு முஸ்லிம் உலகின் ஆள் வளம், எண்ணெய் வளம், பொருளாதார வளம் எல்லாமே அர்த்தமற்றுப் போனதன் பின்னரே அல்லாஹ்வின் குத்ரத்துக்கள் அத்தாட்சிகள் ஒவ்வொன்றாய் வெளிப்பட ஆரம்பிக்கும்.
அன்றுதான் வல்லரசுகளும் அவர்களின் படையணிகளும், அணு ஆயுதங்களும் பிர்அவுனிய சாம்ரஜ்யங்களாக சரிந்து வீழும், அவர்களால் உருவாக்கப்பட்ட போலி விமோஷகர்களும், வில்லர்களும் அழிந்து ஒழிந்து போவார்கள்.
அவர்களால் ஆக்கிரமிக்கப்படும் பூமிகளும், அவர்கள் வாழும் பூமிகளும் அல்லாஹ்வின் பெயரையே சொல்கின்றன.
ஆட்சி அதிகாரம், செல்வம், செல்வாக்கு என போலி தாஜ்ஜால்களை நிராகரித்து அனாதரவாக, அந்தரப்பட்டுப் போயிருந்த ஒரு விசுவாசிகள் கூட்டம் வெற்றிமேல் வெற்றியை ஈட்டித் தரும், அல்லாஹ்வின் அத்தனை படைப்புக்களும் அவர்கள் வசமாகும்!
நீண்டகால வதிவிடக் கற்கைகளை வழங்குவதற்காக சிறார்களையும் பருவ வயதினரையும் சமூகத் தளத்திலிருந்து தனிமைப்படுத்தி விடுதிகளில் முடக்கிவைப்பது இயற்கை நியதிகளுக்கும் இஸ்லாமிய விழுமியங்களுக்கும் முரணான பிறசமூகங்களிடமிருந்து நாம் பெற்றுக் கொண்ட துறவறம் போற்றும் குருபீட நடைமுறையாகும், மாற்று வழிகள் காணப்படல் வேண்டும்.

