# முகநூலில் கடந்த சில நாட்களாக நானிட்ட வர்ணக் குறும்பதிவுகள் !
நீங்கள் விரும்பிய ஒரு பதிவின் கீழ் உங்கள் கருத்துக்களை விரிவாக எழுதுங்கள்!
- இந்த சமூகத்திலும் தேசத்திலும் தலைமைகள் இல்லை என்பதனை விட பிழையானவர்கள்
அவற்றை ஆக்கிரமித்துள்ளனர் என்பதே உண்மை!
- சமூகம் செலுத்தியுள்ள விலைக்கு பன்மடங்காக பிரதிபலனை பெற உணர்ச்சி வசங்களுக்கப்பால் அறிவுபூர்வமாக ஆன்மீக ஒளியில் நாம் சிந்திப்போம்.
- அரசியல் நிழச்சி நிரலோடு பெருந்தேசியவாத பொருளாதார நிகழ்ச்சி நிரல் முழு வீச்சில்! மொத்த சில்லறை மற்றும் சீசன் வியாபாரம் இலக்கு!
- சில பிரபலங்களின் நிறுவன ரீதியிலான அரசியல் அரசியல் வாதிகளின் அரசியலை விட அபத்தமானதாக, ஆபத்தானதாக இருக்கிறது.
- பிரபுக்களையும் பிரபலங்களையும் இனியும் நம்பியிராது ஊர்மட்ட மாவட்ட மட்ட “ஷூரா” கட்டமைப்புக்களை இன்றே ஏற்படுத்தி அதன் வழிநடப்போம்!
- தேசிய,பல்தேசிய, பிராந்திய அரசியல் பொருளாதார இராணுவ மூலோபாய நகர்வுகளிற்காக உம்மத்து பலிக்கடாவாக்கப் படுகிறது!
- சர்வதேச சமூகத்தையோ முஸ்லிம் உலகத்தையோ இலங்கை முஸ்லிம்கள் நம்பியிருக்க முடியாது, தீர்வு அல்லாஹ்விற்குப்பின் எங்களிடமே இருக்கிறது.
- நீங்கள் முன்வைக்கும் எதிர்பார்க்கும் ஒரு பணியை களத்தில் அமுலாக்கும் ஒரு சில
சகோதரர்களுக்கு ஆதரவு தாருங்கள், அவர்களும் வாழணும்!
- எனது நண்பர்கள் பார்வையாளர்களாக அன்றி அறப்பணிகளில் பங்காளர்களாக இருப்பதனையே விரும்புகிறேன், இந்த நல்லுறவு இன்மையில் நிறைவு பெறுவதல்ல. இன்ஷா அல்லாஹ்.
- பேரின அரசியலின் ஆழ அகலங்களை புதிய தலைமுறையினர் புரிந்து கொள்தல் கட்டாயமாகும்! “இராஜதந்திரம்” நாம் இழந்து தவிக்கும் ஒர் ஆயுதம்.
- முடியுமானவற்றை (10 தனித்தனியாகவும் குழுக்களாகவும் போட்டி போட்டு செய்யும் நாம் செய்ய வேண்டியவற்றை (90%) மறந்து விடுகிறோம்!
- தோள்மேல் கரம் போட்டு முதிர்சியின்மையால் முதுகில் குத்தும் உனை உன் பணிகள் கருதி முதுகில் தட்டிக் கொடுப்பதில் ஆனந்தம் தோழா.
- தேசிய வாழ்விலும் சமூக வாழ்விலும் நிராகரிக்கப்பட வேண்டியவர்களே நாட்டை அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளனர்; அரசியலில் மட்டுமல்ல.
- மனித குலத்தின் விமோசனத்திற்கான கருணைத் தூதை முன்வைப்பதில் நாம் தவறிழைத்து விட்டோம், இனியும் காலம் கடத்த முடியாது!
- மனித குலத்திற்கான மகத்தான தூதை யுகத்திற்கான பரிபாஷைகளில் அனைவருக்கும்
சொல்வதில் தான் நிலையான அமைதி சமாதானம் இருக்கிறது.
- எல்லாம் இருந்தும் ஒன்றுமே இல்லாமல் போட்டி பொறாமையில் அழிகிறோம், அரசியலில் மட்டுமல்ல!
- பதிவுகள் பகிர்வுகள் ஆபத்தில் தள்ளி விடலாம்! நண்பர்கள், வீட்டில் உள்ளவர்கள் குறிப்பாக சகோதரிகளை அறிவுறுத்துங்கள்.
- அமானிதங்களை பாழ் படுத்துவோரை குறை கூறிக் கொண்டு மாத்திரம் காலத்தை கடத்தாது தனித்தும் சேர்ந்தும் நாம் செய்ய வேண்டியவற்றை செய்வோம்!
- நாம் கடத்துகின்ற ஒவ்வொரு நொடியும் தீர்க்கமானவை, சம்பவங்களோடு வாழும் நாம் சரித்திரங்களை மறந்து போகிறோம்! உஷார் மடையர்கள்.
- ஒரு சிலரின் அதிகாரப் போட்டிக்கு நம் சமூகம் பலிக்கடா ஆகிறது, இவ்வாறே விட்டு விட்டால் வரும் சந்ததிகள் எம்மை சபிக்கும்.
- நிவாரணம் பெறுவோரை படம்பிடித்து சமூக ஊடகங்களில் போட்டு அசெளகரியப்படுத்தாது அல்லாஹ்விற்காக அறப் பணிகள் செய்வோம்.
- குறைகளை மாத்திரம் கண்டு நிறைகளை காண மறுக்கும் அல்லது தவறிவிடும் பலர் எதுவுமே ஆக்கபூர்வமாக செய்ய முன்வருவதுமில்லை.
ஆலோசனைகளை விட அர்ப்பணிப்புகளே அதிகம் தேவை, தன்னார்வளர்கள் முன்வரவும்.
- கலவரங்களிற்கு பின்னரான நிவாரண உதவிகள், தரவு திரட்டல், சட்ட உதவிகள் என்பவற்றை ஒருங்கிணைப்பதில் ஊர்மட்ட ஷுராக்கள் வகிபாகம் அவசியம்.
- கிராம சேவகர்களூடாக மாவட்ட செயலகங்கள் திரட்டும் உத்தியோக பூர்வ தகவல்கள், தரவுகள் சேதவிபரங்களே அரச இழப்பீடுகள் பெற அவசியம்.
- தேசிய ஷுரா சபையின் ஆரவாரங்களற்ற பணிகளில் பார்வையாளர்களாக அன்றி பங்காளர்களாக இணைந்து செயற்பட முன் வாருங்கள்.
- நாம் நிகழ்வுகளால் உந்தப் படுகின்றோம் நிகழ்ச்சி நிரல்களை மறந்து விடுகின்றோம்,எங்களுக்கென்று ஒரு நிகழ்ச்சி நிரலும் கிடையாது!
- எமது தேசிய வாழ்வில் எங்கே கோளாறு இருந்திருக்கிறது என்பதனை உணர்ந்து நாமாக எம்மை மாற்றிக் கொள்ளாதவரை எதிர்காலமும் கேள்விக் குறியே!
- கூலிப்படை காடையர்களின் பின்னால் உள்ள அரசியல் சதிகாரர்களது நிகழ்ச்சி நிரல்கள் குறித்தும் நாம் அவதானமாக இருக்க வேண்டும்!
- அரசியலுக்காகவும் ஆக்கிரமிப்புகளுக்காகவும் இனம் மதம் மொழி என பேதமைகள் போஷிக்கப்பட்டு அழிவுகள் அரங்கேற்றப்படுகின்றன!
- நவீன இஸ்லாமிய சிந்தனைகளும் சிந்தனைப் பள்ளிகளும் அறிஞர்களும் கல்விமான்களும்
இன்னும் சிவில் சமூகப் படவில்லை என்பதனை உணருகிறோம்!
- அன்று வாரத்தைகளால் வசனங்களால் சாதித்தவைகளை இன்று உரைகளாலும் நூல்களாலும் சாதிக்க முடியவில்லை!
- யார்யாரோ படைத்த வரலாறுகளை புரட்டிப் புரட்டிப் படிக்கும் எம்மால் சொந்த வரலாற்றைப் படைக்க ஒரு எட்டைக் கூட முன்வைக்க முடியவில்லை!
- அழகிய எளிய அன்றாட இஸ்லாமிய வாழ்வு நெறியை வித விதமான வியாக்கியானங்களால் வித்துவான்கள் சிக்கலான சர்சைகளாக்கி விடுகின்றனர்!
- எமது குறுகிய எண்ணம் கொண்ட அரசியல் பொருளாதார சமய கலாசார சீர்கேடுகளும் ஐக்கியமின்மையும் எதிரிகளை நன்கு போஷிக்கின்றன!
- உம்மத்தில் உள்ள ஓரிரு தீயவர்கள் ஒட்டு மொத்த உம்மத்திற்கும் அழிவை, இழிவை தேடித்தருவார்கள், இஸ்லாம் இதை சொல்லித் தந்திருக்கிறது!
- யார் யாரோ அனுப்பும் வாட்ஸ்அப் களால் வழிநடத்தப் படும் நாதியற்ற சமூகமாக நாம் மாறிக் கொண்டிருக்கின்றோம்.
- ஒரு இனத்தின் மீதான அடாவடி தேசத் துரோகமாகும். சட்டமா அதிபர் திணைக்களம் அரச சட்டத்தரணிகள் விவகாரத்தை கையாள பணிக்கப் படல் வேண்டும்!
- கையாலாகா மூன்று தசாப்த முஸ்லிம் அரசியலின் பின் விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்!
- இருப்பதையும் இழக்கின்ற நிலையில் சமூகம், தலைவர் யாரெனும் சர்சையில் முஸ்லிம்
அரசியல் வியாபாரிகள் அரசியல் சூதாட்டம், அரசியல் தலைமைத்துவமின்றி சமூகம் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி எனும் நிர்க்கதி நிலையில்.
- பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாஸ்திரங்கள், அபிஷேகம் செய்ய அபிமானிகள் இருக்கும் வரை ஷைத்தான்களின் சாம்ராஜ்யங்கள் சரிவதுமில்லை.
- அராஜகம் கோலோச்சுமெனில் அறப்பணிக்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கின்றன, சவால்களிற்குப் பின்னால் உள்ள சந்தர்ப்பங்களைத் தேடுங்கள்!
- சத்தியம் (الحق) செத்துப் போவதில்லை! அதன் காவலர்கள் சளைத்து விடுவதுமில்லை!
- பல்வேறு பின்புலங்களுடன் நிகழ்ச்சி நிரல்களுடன் சமூகத்தை பல தளங்களிலும் பிரதிநிதித்துவம் செய்வோர் குறித்து அவதானம் தேவை!
- ஒரு காட்டை எரித்துவிட ஒரு தீக்குச்சி போதும், அணைப்பதற்குத் தான் ஆற்று வெள்ளம் தேவை! வீரமும் அர்பணிப்பும் தீயணைப்பதற்கே தேவை!
- “ஷுரா” என்பது “நான்” “நீ” என்றிலா “நானும் நீயும்” “நாம்” ஆக ஒருமிக்கும் உண்மையான மக்கள் நியாயாதிக்க தலைமைத்துவமாகும்.
-
Minolta DSC வருமுன் காக்க அடிமட்ட தலைமைகள் அவசியம், வந்தபின் பார்க்கமட்டுமே தேசியமட்ட தலைமைகளால் முடியும். ஊர்மட்ட ஷுராக்கள் அவசியம்.
- சமூகத் தலைமை என்பது (ஷூரா) கூட்டுப் பொறுப்பாகும். என்னால்,எம்மால் மாத்திரமே முடியும் என்று தனி நபர்களோ குழுக்களோ கோருவது தப்பு!
- “எம்மால் முடியும்” என்போரை வரவேற்கும் அதேவேளை, “எம்மால் மட்டுமே முடியும்” என மார் தட்டுவோரை நெறிப்படுத்துதலும் கடமையாகும்.
- தனிப்பட்ட தகராருகளால் கலவரங்கள் ஏற்படவில்லை, கலவரங்களிற்காக திட்டமிடப்பட்ட தகராருகள் உருவாக்கப்பட்டன. இரட்டிப்பு அவதானம் தேவை!
- மேலதிக பேணுதலிற்காக அறிமுகப் படுத்தப் பட்ட சில விதிகள் அதனை விடவும் பாரதூரமான தற்காப்பு நியாயங்கள் கருதி கைவிடப்படலாம்!
- புறக் கோலங்களில் (தலை) வீங்கிப் போன ஒரு சமூகம்! உஷார் மடமைகளின் உச்சக் கட்டத்தில், எதிர் வினைகளால் நகர்த்தப் படுகிறது.
- அரபுக் கல்லூரிகளுக்கு கலைத்துறையில் மாத்திரம் கற்க மாணவர்கள் உள்வாங்கப் படுவது குறித்து மீள்பரிசீலனை வேண்டும்!
அஹதிய்யா அறபு மதரஸா மாணவர்கள் மற்றும் ஆலிம்கள் தேசிய உடைக்கு நிகரான அரை ஜுப்பா சீருடையை மீள அறிமுகம் செய்தல் காலோசிதமானது.
- சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான இறுதிச் சமரே உலகெங்கும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான அடக்குமுறை!
- ஏப்ரல் விடுமுறையை முஸ்லிம்கள் எவ்வாறு கழிக்கின்றார்கள் என்பதை வைத்தே சமூக எதிர் காலம் குறித்த சில மதிப்பீடுகளை செய்து கொள்ளலாம்.
- தொடரும் இன்ஷா அல்லாஹ்